2012-09-12 16:16:25

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


செப். 12, 2012. திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல் கந்தோல்ஃபோவிலிருந்து ஹெலிகாப்டரில் வத்திக்கான் நகர் வந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்குச் 'செபம்' குறித்த தன் மறைக்கல்விப் போதனைகளை வழங்கினார். திருவெளிப்பாடு நூலில் செபம் குறித்துக் காணப்படுபவைப் பற்றி, தன் மறைபோதகத்தை கடந்த வாரப் புதன் பொதுமறைப்போதகத்தில் வழங்கிய திருத்தந்தை, இவ்வாரமும் அதே பாதையில் தொடர்ந்தார்.
வரலாற்றில் இடம்பெறும் திருஅவையின் திருப்பயணத்தில் செபத்தின் முக்கியத்துவம் குறித்து திருவெளிப்பாடு நூல் கூறுவதை இன்று நோக்குவோம். இறையரசைப் பரப்புவதற்கான இறைத்திட்டத்தின் ஒளியில் வரலாற்று நிகழ்வுகளை ஆழ்ந்து உய்த்துணர செபம் நமக்கு உதவுகிறது. ஏழு முத்திரைகள் பொறிக்கப்பட்டு மூடப்பட்டிருந்த புத்தகம் இறைத்திட்டத்தின் உருவகமாகக் காட்டப்பட்டுள்ளது. சிலுவையில் அறையுண்டு, மரித்து, உயிர்த்த நமதாண்டவராம் ஆட்டுக்குட்டியால் மட்டுமே அப்புத்தகம் திறக்கப்பட முடியும். பாவம் மற்றும் மரணத்தின் மீது இறைவன் கண்ட இறுதி வெற்றியே, அனைத்து வரலாற்றின் திறவுகோல் என்பதைச் செபத்தில் நாம் காண்கிறோம்.
இந்த வெற்றிக்காக இறைவனுக்கு நாம் நன்றி கூறும் அதேவேளை, நம் இவ்வுலகப் பயணத்திற்கான இறை அருளைத் தொடர்ந்து இறைஞ்சுகிறோம். வாழ்வின் தீமைகளின் மத்தியில் இறைவன் நம் செபங்களுக்குச் செவிமடுக்கிறார். நம் பலவீனங்களை அகற்றி நம்மைப் பலப்படுத்தி அவரின் இறைமை சான்ற வல்லமையில் நம்பிக்கைக்கொள்ள உதவுகிறார். 'ஆம், விரைவாகவே வருகிறேன்' என்ற இயேசுவின் வாக்குறுதியுடனும், 'ஆண்டவராம் இயேசுவே வாரும்' என்ற திரு அவையின் ஆர்வமிக்க, உக்கிரமானச் செபத்துடனும் திருவெளிப்பாடு நூல் நிறைவு பெறுகிறது. இயேசுவின் மகிமை நிறை வருகை குறித்த நம்பிக்கையில் வளரவும், உருமாற்றவல்ல இறை அருளின் வல்லமை குறித்த அனுபவத்தைப் பெறவும், விசுவாச ஒளியில் அனைத்தையும் ஆய்ந்து அறியவும் நம்முடைய செபங்கள், குறிப்பாக திருப்பலிக் கொண்டாட்டங்கள் உதவுவதாக.
இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இவ்வாரம் வெள்ளிக்கிழமையன்று துவங்கும் லெபனன் நாட்டிற்கானத் தன் திருப்பயணம் வெற்றியடைய செபிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.