2012-09-12 16:24:35

திருத்தந்தை : சாலையோரப் பெண்கள், சிறார் மீது அக்கறை காட்டப்படுமாறு அழைப்பு


செப்.12,2012. ஆப்ரிக்காவில் சாலைகளிலும் தெருக்களிலும் ஆபத்தான வாழ்வை எதிர்நோக்குகின்ற, குறிப்பாக சாலையோரப் பெண்கள் மற்றும் சிறாரின் பாதுகாப்புக்குத் தலத்திருஅவைகள் மிகுந்த ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த முயற்சிகளில் ஈடுபடுமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
ஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கர் முழுவதிலும் சாலையோரங்களில் வாழும் மக்களின் நல்வாழ்வு குறித்து, டான்சானிய நாட்டு Dar-Es-Salaamல் முதன்முறையாகத் திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர் அவை நடத்தும் கூட்டத்திற்குத் திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Dar-Es-Salaam பேராயர் கர்தினால் Polycarp Pengoவுக்குத் திருத்தந்தையின் பெயரால் இச்செய்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே.
மக்கள் சாலைகளில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கூறுகளையும் சுட்டிக்காட்டியுள்ள அச்செய்தியில், பாதுகாப்பற்ற சாலைகளால் ஆப்ரிக்காவில் இலட்சக்கணக்கான மக்கள் இறப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Dar-Es-Salaamல் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள இக்கூட்டம் வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.