2012-09-11 16:48:25

விவிலியத் தேடல் - திருப்பாடல்கள் 135&136


செப்.11,2012 RealAudioMP3 . பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் ஆண்டுக்கொண்டிருக்கும் எல்லாம்வல்ல பணத்தை விசுவசிக்கின்றேன். பணத்தோடு இணைந்து செயல்பட்டு எல்லா அதிகாரத்தையும் தரும் பதவியையும் விசுவசிக்கின்றேன்.
பணம் மற்றும் பதவியிலிருந்து பிறக்கும் பொய், புரட்டை விசுவசிக்கின்றேன். சொன்ன பொய், புரட்டை சமாளிப்பதற்காக, எதற்கும் சமாதி கட்டவேண்டும் என்பதை விசுவசிக்கின்றேன்.
சாவின் விளிம்பிற்கு சென்றவனுக்கும் பணம் மற்றும் பதவி மறுவாழ்வை கொடுக்கும் என்பதை விசுவசிக்கின்றேன்.
சுயலாபத்திற்காக நடுநிலைமையற்றுச் செயல்படும் மீடியாக்களின் தீர்ப்பை விசுவசிக்கின்றேன். சாதி சங்கங்களை விசுவசிக்கின்றேன்.
சமூக நலமேயில்லாத திரைப்பட நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் விசுவசிக்கின்றேன்.
எவ்வளவு பெரிய தீமை செய்தாலும் தப்பித்துக்கொள்வோம். எனவே எதையும் செய்யலாம் என்பதை விசுவசிக்கின்றேன்.
வாழ்வது ஒரு முறை. சரியோ, தவறோ எல்லாவற்றையும் அனுபவித்துவிடவேண்டும் என்பதை விசுவசிக்கின்றேன்.
என்ன அன்பர்களே! புரிந்துவிட்டதா? ஆம். இதுதான் நவீன விசுவாச அறிக்கை. இவைகள்தான் நம் சமுதாயத்திலுள்ள நம்பிக்கைகள். ஒட்டு மொத்தமாக, இவை எல்லாம் ஒவ்வொரு மனிதரிலும் குவிந்துகிடக்கிறது என்று சொல்லிவிட முடியாதெனினும், இவற்றில் ஓரிரண்டு காரணிகளாவது ஒவ்வொரு மனிதரிடத்திலும் உள்ளதென நினைக்கிறேன். இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வளர்த்திருக்கும் சமுதாயத்தில் வாழும் நமக்கு இன்றைய விவிலியத் தேடல் தரும் பாடம் இஸ்ரேல் மக்களின் விசுவாச அறிக்கையே. ஆம் இன்று நாம் இரண்டு திருப்பாடல்களைச் சிந்திக்கின்றோம். திருப்பாடல் 135 மற்றும் 136. ஏனெனில் இப்பாடல்கள் ஒத்தக் கருத்தை மட்டும் சொல்பவை அல்ல. ஏறக்குறைய ஒரே பாடல் என்று சொல்லுமளவுக்கு இருக்கின்றன.
திருப்பாடல் 135 மற்றும் 136, ஆங்காங்கு விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டச் சொற்றொடர்களின் தொகுப்பு என்பதே விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. இப்பாடல்களின் முதல் 2 சொற்றொடர்கள், திருப்பாடல் 134ன் முதல் மூன்று சொற்றொடர்கள் என்றும், 4வது சொற்றொடர் இணை சட்டம் 7: 6 என்றும், 7வது சொற்றொடர் எரேமியா 10:13 என்றும் சொல்லப்படும் குறிப்பு நீள்கிறது. மொத்தத்தில், இப்பாடல் இஸ்ரேல் மக்களின் மீட்பு வரலாற்றின் சுருக்கம் என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக மீட்பு வரலாற்றில், யாவே இறைவனின் கைவண்ணம் என்று சொல்வதே பொருத்தமானதாக அமையும் எனவும் கருதுகிறேன். இப்பாடல்கள் நாம் திருப்பலியில் பயன்படுத்தும் பதிலுரை பாடலைப் போன்று அமைந்துள்ளன. ஒவ்வொரு சொற்றொடரின் முதற்பகுதியை தலைவர் ஒருவர் பாட, அனைவரும் ‘என்றும் உள்ளது அவரது பேரன்பு’ என்று பதிலளிப்பதாக உள்ளது. மறைந்த திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் இப்பாடல்களைப்பற்றி இவ்வாறு சொன்னார்: திருப்பாடல் 135 மற்றும் 136, துவக்க சொற்றொடர்களில் இறைவனைப் புகழ்வதற்காக அழைப்பு விடுக்கின்றன. அதைத் தொடர்ந்து, இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் இறைவன் செய்த மாபெரும் செயல்களையும், அவர்கள் அவரில் கொண்டிருக்கும் விசுவாசத்தையும், இவ்வறிக்கையின் முடிவில் இறைவன் செய்தவற்றிற்காக அவர்கள் அவரைப் புகழ்வதாகவும் அமைந்துள்ளன.
திருப்பாடல் 136: 10-18
எகிப்தின் தலைப்பேறுகளைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை வெளிக்கொணர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
தோளின் வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும் அதைச் செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
அதன் நடுவே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
பாலை நிலத்தில் தம் மக்களை வழிநடத்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
மாபெரும் மன்னர்களை வெட்டி வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
வலிமைமிகு மன்னர்களைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
அவர்கள் வாழ்வில் நடந்தது எல்லாமே இறைவனால்தான் நடந்தது, இறைவன்தான் செய்தார் என்பதில் உறுதியாக இருப்பதை இச்சொற்றொடர்கள் வழியாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இஸ்ரயேல் மக்களின் எதிரிகள் அனைவரும் அழிக்கப்பட்டனர் என்பதை இறைவன்தான் செய்தார் என்று பார்க்கவேண்டியதில்லை. ஏனெனில் எதிரிகளோடு போரிட்டது இஸ்ரயேலின் அரசர்கள். புத்திக் கூர்மையுள்ள அரசர்களாலும், வீரமிக்க போர்வீரர்களாலும்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்திருக்கலாம். பல்வேறு வாதைகளின் வழியாக எகிப்தியரைத் தாக்கி எங்களை விடுவித்தார் என்று பாடுகிறார்கள். இவ்வாதைகளை இறைவன்தான் வரசெய்தார் என்று சொல்லாமல், வாதைகள் இயற்கையாக வந்ததாகப் பார்க்கலாம், ஆனால் இஸ்ரயேல் மக்கள் அனைத்தையும் இறைவனுடைய கைவண்ணமாகவே பார்த்தனர். எகிப்தின் தலைபேறுகள் தாக்கப்பட்டதற்கும், மனிதர்கள், கால்நடைகள் அழிந்ததற்கும் நவீன ஆய்வாளர்கள் அறிவுபூர்வமாக அறிவியல் சார்ந்தக் கூறுகளையும், இயற்கைக் கூறுகளையும் காரணங்களாக முன்வைக்கின்றனர். எடுத்துகாட்டாக யாவே இறைவன், மோசே வழியாக செங்கடலை இரண்டாக பிரித்து, இஸ்ரயேலர்கள் கடந்து போக வசதி செய்ததாகவும், அவர்களைத் துரத்தி வந்த எகிப்தியர்கள் செங்கடலைக் கடக்க முயன்றபோது, தேர்களும், குதிரைகளும் ஈரமண்ணில் புதைந்து, அவைகளோடு எகிப்தியரும் மாண்டு போகச்செய்தார் என்பது விவிலியம் கூறும் வரலாறு. இறைவனே இதற்குக் காரணம். அவரது கைவண்ணமே அவர்களை விடுவித்தது என்பது இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை.
ஆனால் நவீனகால ஆய்வாளர்கள், இதற்கு அறிவியல் சார்ந்த அறிவுப்பூர்வமானக் காரணங்களை முன்வைக்கின்றனர். செங்கடல் என்பது ஆங்கிலத்தில் RED SEA என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் REED என்றால், தமிழில் நாணல் என்று பொருள். REED என்ற சொல் RED என மருவி RED SEA என அழைக்கப்படலாயிற்று. செங்கடல் என்பது நாணல் நிரம்பிய கடல். காற்று அடிக்கும் போது, நாணல் வளையும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதிகமான காற்று அடிக்கும் போது, காற்றின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் நாணல் அனைத்தும் தரையில் படுத்துக்கொள்ளும். காற்று இல்லாதச் சமயத்தில் நாணல் ஓங்கி உயர்ந்து நிற்கும் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்தபோது காற்று இல்லாததால் நாணல் அனைத்தும் ஓங்கி உயர்ந்து நின்றன. எவ்வித தடையுமின்றி அவர்கள் கடலைக் கடந்துவிட்டனர். ஆனால் எகிப்தியர் வரும்போது காற்றின் வலிமையால், நாணல்கள் அனைத்தும் படுத்துக்கொண்டன. எனவே எகிப்தியரின் குதிரைகளும், தேர்களும் மாட்டிக்கொண்டன.
இதோடு மற்றொரு கருத்தையும் முன்வைக்கின்றனர். கடற்பகுதியில் இரவு நேரங்களில், அதிகமான அலைகளின் காரணமாக, கடலின் நீர்மட்டம் உயர்ந்து கடலை ஓட்டிய தாழ்வானப் பகுதியில் தண்ணீர் வந்து தேங்கி நிற்கும். ஆனால் அந்த இடத்தில் பகல் நேரங்களில் தண்ணீர் இருக்காது. அதிகாலையில், தேங்கிய தண்ணீரை கடல் உள்வாங்கிக்கொள்ளும். இது கடல் பகுதியில் குடியிருப்போர் அறிந்த சாதாரண உண்மை. இஸ்ரயேல் மக்கள் கடலைக் கடந்தபோது தண்ணீர் உள்வாங்கப்பட்டிருந்தது. எனவே எவ்வித தடையுமின்றி முன்னேறிச் சென்றனர். அவர்களைத் துரத்திவந்த எகிப்தியர் வந்தபோது, தண்ணீர் இருந்தது. எனவே தண்ணீரில் மாட்டிக்கொண்டனர்.
மேலே சொன்ன நாணற்கடலின் விளக்கத்தையும், தற்போது சொன்னக் கடல் தண்ணீர் உள்வாங்கப்படும் விளக்கத்தையும் சேர்த்துப் பார்த்தால், இது இயற்கையாகவே நிகழ்ந்தது; இறைவனுக்கும், இந்நிகழ்விற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போலத்தோன்றும். 2000 ஆண்டுகளுக்கு பிறகு ஆய்வுச்செய்து இவ்விளக்கத்தைக் கொடுக்கின்றனர். ஆனால், இந்த அனுபவத்தைப் பெற்ற இஸ்ரயேல் மக்களுக்கு இது தெரியாமல் இருந்திருக்குமா? கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். தெரிந்தும் இப்படி எழுதுகின்றனர் என்றால் அதுதான் இஸ்ரயேல் மக்களின் இறைநம்பிக்கை. காற்று எப்போது வலிமையாக வீசும், எப்போது தென்றலாக வீசும் என எந்தவித உத்திரவாதமும் இல்லை. அதே போன்று கடல் தண்ணீரை உள்வாங்குவது எப்போது நிகழும் என யாராலும் அறுதியிட்டு கூற முடியாது. ஆயிரம், ஆயிரம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகும், இன்று தட்பவெப்ப நிலையையும், நிலநடுக்கத்தையும், சுனாமியையும் 100 விழுக்காடு துல்லியமாக நம்மால் கணக்கிடமுடிகிறதா? இல்லையே. மழை பெய்யாது என்று அறிவிப்புக் கொடுத்த பிறகுதான் மழை பெய்கிறது.
அன்று மட்டுமல்ல, இன்றும்கூட, அவர்களின் வாழ்வில் மட்டுமல்ல, நமது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் இறைவனே காரணமாக இருக்கிறார். ஆனால், நாம், நமது திறமை, அறிவு, அதிகாரம், பணம் போன்றவைதான் காரணம் என நினைக்கிறோம், பெருமைப்படுகிறோம். ஞாயிறு வழிபாடுகளிலும், கடன்திருநாள் திருப்பலியிலும் நம் விசுவாசத்தை அறிக்கையிட்டாலும் ‘இறைவன்தான் எல்லாமே’ என்பதைக்காட்டிலும் நான், எனது திறமை, அறிவு, அதிகாரம் என்பவையே காரணம் என்ற எண்ணமே மேலோங்கி நிற்பதாகவே நான் பார்க்கிறேன். இஸ்ரயேல் மக்கள் எல்லாமே இறைவன் என்று ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பதற்கான காரணம் என்னவெனில், அவர்களின் ஒன்றுமில்லாத்தன்மையை நன்கு உணர்ந்திருந்தார்கள். எங்களது வீரமோ, மன்னர்களின் புத்திக்கூர்மையோ, எங்களது நேர்மையான வாழ்வோ, நல்ல மனமோ, தாராள குணமோ அல்ல. மாறாக, இறைவனே எல்லாவற்றிற்கும் காரணம் என்று சரணாகதி அடைகின்றனர். இந்த சரணாகதி ஏதோ திடீரென வந்ததல்ல. மாறாக, யாவே இறைவனோடு அவர்கள் கொண்டிருந்த ஆழமான அனுபவத்திலிருந்து வந்தது. நாம் மட்டுமல்ல, அவர்களும் இறைவனைக் கண்டதில்லை. ஆனாலும், நம்பினார்கள். காரணம் அவர்களது அனுபவம். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக யாவே இறைவனின் அன்பையும் அரவணைப்பையும், வழிகாட்டுதலையும் பார்த்தனர். அவை எல்லாம் இயல்பாக நடந்ததாகப் பார்க்காமல் இறைவனால்தான் நடந்ததெனப் பார்த்தார்கள்.
இயல்பாக நடந்ததை இறைவன் மேல் ஏற்றி கூறிவிட்டார்கள். நாமும் அதேபோல எல்லாவற்றையும் இறைவன்மேல் ஏற்றிக்கூற வேண்டிய அவசியமில்லை என நினைக்கத் தோன்றுகிறதா? இது ஏற்றிக்கூறுவதல்ல. மாறாக, இந்நம்பிக்கை இறைவனோடு அவர்கள் கொண்டிருந்த அனுபவத்திலிருந்து பிறந்தது. ஒருவரை ரொம்ப நல்ல மனிதர் என்று சொல்லுகிறோமென்றால், எதுவுமே தெரியாமல் சொல்வதல்ல. மாறாக அவரோடு ஏற்பட்ட ஆழமான அனுபவத்திலிருந்து பிறந்தது.
எனவே நமது நம்பிக்கையும், விசுவாசமும் ஆழப்படவேண்டுமானால், நாமும் இறை அனுபவம் பெறவேண்டும். நமது பிறப்பு முதல் இன்றைய நாள் வரை இறைவன் நமக்குச் செய்திருக்கும் நன்மையையும், காட்டியிருக்கும் பேரன்பையும் நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் வாழ்வின் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் இறைவன் உடன் இருந்திருக்கிறார் என்பதை உணர வேண்டும். நிகழ்காலத்தில் அவரது உடனிருப்பை உணர்ந்து, அவரது அன்பில் வாழவேண்டும். அப்போது உண்மையாக நமது மனதிலிருந்து விசுவாசம் எழும்.








All the contents on this site are copyrighted ©.