2012-09-11 16:54:59

நல்ல அரசியல் தலைவர்களை நாடுகள் கொண்டிருக்க செபிப்போம்...


அன்பர்களே, அரசியலில் பகையும் இல்லை. நட்பும் இல்லை என்று சொல்வார்கள். ஒரு தேர்தல் கூட்டணி அடுத்த தேர்தலில் கலைந்து விடுகிறது. ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு கட்சித் தலைவரைக் கடுமையாய் வசைபாடிய மற்றொரு கட்சித் தலைவர், அடுத்த தேர்தல் பிரச்சாரத்தில் அதே கட்சித் தலைவரை வாய் நிறையப் பாராட்டுகிறார். அதேபோல் ஆட்சியைப் பிடித்தவுடன் முன்னாள் ஆளும் கட்சியை குறை சொல்லிச் சொல்லியே ஐந்தாண்டுகளைக் கடத்தி விடுகிறது ஆட்சியிலிருக்கும் கட்சி. அப்படியிருக்க மக்கள் முன்னேற்றத் திட்டங்களில் எப்படிக் கவனம் செலுத்த முடியும்?. இவர்களை நம்பி வாக்களித்த மக்களின் நல்வாழ்வுக்கு இவர்களால் எப்படி உதவ முடியும்? இதுதான் அரசியல்!. இதையெல்லாம் அப்பாவி குடிமககள் கண்டு கொள்ளவே கூடாது. இந்தியாவில் இப்போதெல்லாம் ஊழல் ஊழல் என்ற கூச்சல்களே பரவலாகக் கேட்கின்றன. அண்மை நாள்களாக நாட்டை உலுக்கியிருப்பது நிலக்கரி சுரங்க ஊழல். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் 1 இலட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான தனது விளக்க அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின் நிருபர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் இதற்கு ஆயிரம் பதில்களைவிட என் மவுனமே மேல் என்று கூறியுள்ளார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் தவறே நடக்கவில்லை என்பதை நாட்டு மக்களுக்கு கூறிக்கொள்கிறேன். உள்நோக்கத்துடன் கிளப்பப்படும் எந்த விவகாரத்துக்கும் பதில் அளிக்காமல் மவுனமாக இருப்பதுதான் என் கொள்கை. ஆயிரம் பதில்களைவிட என் மவுனம் மேலானது. மவுனம்தான் எண்ணற்ற அபத்தமான கேள்விகளுக்கு தரும் மரியாதை. சி.ஏ.ஜி அறிக்கையில் பல தவறுகள் இருக்கிறது. அறிக்கையை நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு பரிசீலிக்கும்போது, தவறுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி விளக்கம் அளிப்போம் என்றும் கூறியிருக்கிறார். அடுத்து தமிழகத்தில் சூடுபிடித்திருப்பது கிரானைட் குவாரி முறைகேடு.
சிரியா நாட்டில் அரசுக்கும் புரட்சியாளர்க்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையில் இரண்டு தரப்புகளுக்குமே வெளியிலிருந்து ஆதரவு கிடைக்கின்றது. அணுஆயுதப் பிரச்சனை மற்றும் சிரியா அரசுத் தலைவர் Bashar al-Assad க்கு ஆதரவு என்று மேற்கத்திய நாடுகள் ஈரானைக் குற்றம் சொல்லி வரும்நிலையில் ஈரானில் அணிசேரா நாடுகளின் 16வது மாநாடு ஆகஸ்ட் 30,31 இவ்வியாழன், வெள்ளி தினங்களில் நடந்து முடிந்துள்ளது. ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் உட்பட 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேல் ஈரானைத் தனிமைப்படுத்த முயற்சித்தது. மேற்கத்திய நாடுகளும் ஈரான்மீது கண் வைத்துள்ளன, ஆயினும் ஈரான் இம்மாநாட்டை நடத்தி முடித்துள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன. ஐரோப்பாவில் கடும் பொருளாதார நெருக்கடி. அரசியல் தலைவர்களின் ஊதியங்களில் குறைப்பு இல்லை. ஆனால் பாமர மக்களுக்கு வேலை இல்லை. ஊதியம் இல்லை. இப்படி இன்று நாடுகளின் அரசியல் மற்றும் அரசியல் தலைவர்களின் நிலைமைகளை அலசினால் இதனை நாம் ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே வழங்கலாம்.
நாடுகளின் இன்றையத் தேவையை நினைத்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இந்த செப்டம்பர் மாதத்தில் நாம் அனைவரும் அரசியல் தலைவர்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளார். நேர்மை, ஒழுக்கம், உண்மை மீது அன்பு ஆகிய நற்பண்புகளுடன் அரசியல் தலைவர்கள் எப்போதும் செயல்படுமாறு இறைவனைப் பிரார்த்திக்குமாறு நம்மிடம் கேட்டுள்ளார். ஒரு சமுதாயத்தின் வாழ்வை ஒழுங்காக நடத்திச் செல்பவர்களே அரசியல் தலைவர்கள். மக்களுக்கு இடையே, குழுக்களுக்கு இடையே உறவுகளைச் சமன்செய்வதற்கு அவர்கள் தீர்மானம் எடுப்பவர்கள். அவர்கள் சனநாயக உரையாடல் மூலம் சமூகப் பிணக்குகளைத் தீர்த்து வைப்பவர்கள். இதனால்தான் அத்தலைவர்கள் செய்வது ஒவ்வொன்றும் முக்கியமானது. இத்தகைய அரசியல் தலைவர்கள் பாகுபாடு பார்க்காமல், பாரபட்சமின்றி, தங்களுக்கென, தங்கள் குடும்பங்களுக்கெனச் சலுகைகளைத் தேடாமல், பொது நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும்போது அவர்களது நேர்மையான வாழ்வு சமுதாயத்துக்கு வெளிப்படும். அவர்களது நேர்மை, ஏழைகளையும் ஓரங்கப்பட்டவர்களையும் ஒதுக்காமல் சட்டத்தின்முன் அனைவரையும் சமமாகவும் பார்க்கும். அப்போது எல்லாரும் நல்லிணக்கத்துடன் அமைதியில் வாழ்வார்கள்.
அடுத்து, அரசியல் தலைவர்களின் ஒழுக்கமான வாழ்வு மற்ற குடிமக்களுக்கும் எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும். ஒரு சனநாயக சமுதாயத்தில் தங்களது தலைவர்களின் செயல்களில் குடிமக்கள் நல்ல குறிக்கோளைக் காண வேண்டும். அரசன் எவ்வழியோ அவ்வழியே குடிமக்களும் என்று சொல்வார்கள். மேலும், அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்வில் உண்மை மீது அன்பு கொண்டிருக்க வேண்டும். இந்தப் பண்பானது சில்லரைத்தனமான ஆதாயங்களைத் தேடாது. பொதுமக்களின் நலனையும் நல்லிணக்க வாழ்வையுமே தேடும். உரையாடலின் வழிகளைத் திறந்து விடும். எனவே வாழ்வில் நேர்மை, ஒழுக்கம், உண்மை மீது அன்பு ஆகிய பண்புகளுடன் அரசியல் தலைவர்கள் செயல்படுமாறு இந்த செப்டம்பர் மாதத்தில் நாம் செபிப்போம். எங்கே என் பெயரால் இரண்டு அல்லது மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன் என்று சொன்னார் இயேசு. எனவே நாம் எல்லாரும் ஒரே மனதாய் நமது நாடுகளின் அரசியல் தலைவர்களுக்காகச் செபிப்போம். ஊழலற்ற, தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கமான, நேர்மையான அரசியல்தலைவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.
செப்டம்பர் மாத மறைபோதகக் கருத்தாக, ஏழைத் திருஅவைகளுக்கு மற்றத் திருஅவைகள் தங்களது குருக்களையும் பொதுநிலையினரையும் கொடுத்து உதவ நாம் செபிக்குமாறு கேட்டிருக்கிறார் திருத்தந்தை. இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்கு இயேசுவின் நற்செய்தியைக் கொண்டு வந்தவர்கள் ஐரோப்பிய மறைபோதகர்கள். ஆனால் இன்று இந்த ஐரோப்பிய நாடுகளிலும் பல ஆப்ரிக்க நாடுகளிலும் பல ஆசியக் குருக்களும் அருள்சகோதரிகளும் மறைப்பணியாற்றி வருகின்றனர். ஏறக்குறைய 15 ஆயிரம் இந்திய அருள்தந்தையரும் அருள்சகோதரிகளும் 166 நாடுகளில் மறைப்பணி செய்கின்றனர். 214 க்கும் மேற்பட்ட துறவற சபைகள் தங்கள் சபைகளிலுள்ள இந்தியர்களை வேறு நாடுகளுக்குப் பணியாற்ற அனுப்பியிருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. தேவை எங்கு இருக்கிறதோ அங்கு தங்களிடமுள்ள ஆள்வளங்கள் மற்றும் பொருள் வளங்களைக் கொடுத்து உதவ வேண்டும். இறைக்க இறைக்கத்தான் நீர் ஊறும். எனவே இருப்பவர்கள் இல்லாதவர்க்குக் கொடுத்து உதவும்போது தங்களிடம் இருப்பது மேலும் பெருகிப் பலுகும். இயேசுவும் சொன்னார் - கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியில் போடுவார்கள்; நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக்கா 6:38) என்று.







All the contents on this site are copyrighted ©.