2012-09-11 16:09:35

உலகின் அமைதிக்காக சரயேவோவிலிருந்து பல்சமயத் தலைவர்கள் அழைப்பு


செப்.11,2012. உலகில் அமைதியும் ஒப்புரவும் இடம்பெறுமாறு போஸ்னியத் தலைநகர் சரயேவோ நகரிலிருந்து இச்செவ்வாயன்று அழைப்பு விடுத்தனர் பல்சமயத் தலைவர்கள்.
ஐரோப்பாவில் இரண்டாவது உலகப் போர் முடிந்த பின்னர், கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள சரயேவோ நகரில் இச்செவ்வாயன்று நிறைவடைந்துள்ள மூன்று நாள் அனைத்துலக அமைதி மாநாட்டில் கலந்து கொண்ட கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், முஸ்லீம் மற்றும் யூதமதக் குழுக்களின் தலைவர்கள் உலகின் அமைதிக்காக அழைப்பு விடுத்தனர்.
செர்பிய ஆர்த்தடாக்ஸ், குரோவேஷியக் கத்தோலிக்கர், முஸ்லீம்கள் ஆகிய மூன்று முக்கிய இனங்களின் குழுக்களுக்கிடையே 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டுவரை இடம்பெற்ற கடும் சண்டையில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் இறந்தனர். கடந்த இருபது ஆண்டுகளாக இந்த மூன்று இனக் குழுக்களுக்கிடையே உறவுகளும் ஆழமாய்ப் பாதிக்கப்ப்ட்டுள்ளன.
இந்தப் போஸ்னியச் சண்டை தொடங்கியதன் 20ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக உரோம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு இந்த அனைத்துலக அமைதி மாநாட்டை நடத்தியது.
சமயத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என ஏறக்குறைய 300 பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், வறுமை, குடியேற்றம், ஆசியாவிலும் அரபு உலகத்திலும் மதம், கிறிஸ்தவர்க்கும் முஸ்லீம்களுக்குமிடையே உரையாடல் போன்ற தலைப்புக்களில் சுமார் 30 கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
ஒன்றிணைந்து வாழ்வதே வருங்காலம் என்ற மையப் பொருளில் இம்மாநாடு நடத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.