2012-09-11 16:21:16

இந்தியப்பெருங்கடல் தீவு நாடுகளின் திருஅவைகள் எதிர்நோக்கும் சவால்கள்


செப்.11,2012. இந்தியப்பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளின் கத்தோலிக்கர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அப்பகுதிகளின் குருக்கள் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பிரச்னை ஆகியவை குறித்து அப்பகுதிகளின் 40 திருஅவை அதிகாரிகள் மொரீசியஸ் தீவில் ஒன்று கூடி விவாதித்தனர்.
கத்தோலிக்க விசுவாசிகளுக்கு ஆன்மீகப்பணிகளையும், அனைத்து மக்களுக்கும் கல்வி, நலஆதரவு மற்றும் சமூகப்பயிற்சிப் பணிகளையும் ஆற்றிவரும் தலத்திரு அவைகள் சில இஸ்லாமிய நாடுகளில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
குருக்கள் பற்றாக்குறையுடைய நாடுகளில் துறவறத்தார், தியாக்கோன்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் ஏற்று நடத்திவரும் பொறுப்புகள் குறித்தும் பாராட்டியுள்ள தலத்திருஅவைப் பிரதிநிதிகள் நான்கு முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர்.
மனிதாபிமானமிக்க ஓர் உலகை உருவாக்கவும், விடுதலையின் ஆதாரமாகவும் திரு அவையின் வார்த்தைகள் எங்கனம் செயல்பட முடியும் என்பது குறித்து ஆரயப்பட வேண்டும் என்பதை முதல் பரிந்துரையாக முன்வைத்துள்ளனர் இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகளின் திருஅவைகளின் தலைவர்கள்.
மக்கள் தங்கள் மகிழ்வின் ஆதாரமாக நற்செய்தியைக் கண்டுகொள்ள உதவுதல், இறையழைத்தல்கள் அதிகரிக்கச் செபித்தல் மற்றும் உழைத்தல், அமைதியின் உலகை கட்டியெழுப்ப மதங்களிடையே உண்மையான பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தல் போன்றவைகளையும் முன்வைத்துள்ளனர் திருஅவைத் தலைவர்கள்.







All the contents on this site are copyrighted ©.