2012-09-10 17:13:44

திருத்தந்தை : லெபனன் திருப்பயணம் அமைதியின் அடையாளம்


செப்.10,2012. முடிவில்லாத மோதல்களால் நீண்டகாலமாக சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியும் ஒப்புரவும் கிடைப்பதற்கு, அம்மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அனைத்துலக சமுதாயமும் தங்களை அர்ப்பணிக்குமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தினார்.
வருகிற வெள்ளிக்கிழமையன்று தான் மேற்கொள்ளவிருக்கும் லெபனன் திருப்பயணம் பற்றி இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் ப்ரெஞ்ச் மொழியில் பேசிய திருத்தந்தை, இந்த அப்போஸ்தலிக்கப் பயணம், லெபனனுக்கும் அனைத்து மத்திய கிழக்குப் பகுதிக்குமானது என்று கூறினார்.
2010ம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானத் தொகுப்பான அப்போஸ்தலிக்க ஏட்டை இந்த லெபனன் திருப்பயணத்தில் வெளியிடவிருக்கிறேன் என்றும் திருத்தந்தை கூறினார்.
இப்பகுதி மக்கள் அன்றாட வாழ்வில் எல்லாவிதமான துன்பங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். தங்கள் குடும்பங்களையும் தொழில்களையும் விட்டுவிட்டு அமைதியான இடத்தைத் தேடும் இவர்கள்மீது மிகுந்த கவலை கொண்டுள்ளேன். அப்பகுதியைப் பாதித்துள்ள பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது கடினம் என்றாலும், வன்முறைகளையும் பதட்டநிலைகளையும் வளரவிட்டுக் கொண்டிருக்க முடியாது, அனைத்துலக சமுதாயமும் அப்பகுதியில் சண்டையிட்டுவரும் குழுக்களும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இத்திருப்பயணம் மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்குமானது என்றும் உரைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், எனது அமைதியை உங்களுக்கு அளிக்கின்றேன் என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளைக் குறிப்பிட்டு, இத்திருப்பயணம் அமைதியின் அடையாளமாக இருக்கின்றது, லெபனனையும், மத்திய கிழக்குப் பகுதியையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக என்றார்.
இமமூவேளை செப உரையைக் கேட்பதற்காக அங்கு கூடியிருந்த அன்பு திருப்பயணிகளுக்கும், வானொலி அல்லது தொலைக்காட்சி வழியாக இதில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இதனைத் தான் சொல்வதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.