2012-09-08 13:57:50

செப்டம்பர் 09, பொதுக்காலம் - 23ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 இறை இயேசுவிலும், அன்னை மரியாவிலும் என் அன்பு சகோதர சகோதரிகளே, நலன்களைப் பெற்றுத்தரும் ஆரோக்கிய அன்னையின் பெருவிழாவை இச்சனிக்கிழமை கொண்டாடி மகிழ்ந்தோம். ஒரு சில இடங்களில் இந்த ஞாயிறன்று அன்னையின் விழாவைக் கொண்டாடும் திட்டங்கள் இருக்கலாம். செப்டம்பர் 5 , கடந்த புதனன்று அருளாளர் அன்னை தெரேசாவின் நினைவு நாளையும் நாம் கொண்டாடினோம். இந்திய சமுதாயம் நலம்பெற உழைத்த அந்த அன்னையின் விழாவையும், ஆரோக்கிய அன்னையின் விழாவையும் தொடர்ந்து வரும் இஞ்ஞாயிறன்று இடம்பெறும் வாசகங்கள் ஆரோக்கியத்தைப்பற்றி நம்மைச் சிந்திக்க அழைக்கின்றன.
வாழ்வின் தவிர்க்க முடியாத அனுபவங்களான நோய், பிணி, துன்பம், வறுமை இவற்றில் நாம் வாடும்போது நம் மனதில் எழும் எண்ணங்கள் என்ன?

துன்பம் ஏன்? அதிலும் மாசற்றவர் துன்புறுவது ஏன்? என்ற கேள்விகள் மனித சமூகத்தை எப்போதும் தாக்கிவரும் கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு இந்த ஞாயிறு வாசகங்கள் ஒரு சிலத் தெளிவுகளைத் தருகின்றன. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளைக் கேட்கிறோம். இவ்வார்த்தைகள் வேதனையில் இருக்கும் ஓர் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள். அனால் வெறும் வேதனை மட்டும் அங்கு இல்லை. அந்த ஆழமான வேதனையிலும் இறைவனிடம் கொண்டுள்ள விசுவாசம் இவ்வார்த்தைகளில் பொங்கி எழுகின்றது.

எல்லாம் அழிந்துவிட்டது என்று விரக்தியின் எல்லைக்குப் போகும்போது, மனம் பாறையாய் இறுகிப்போகும். அந்த பாறைக்குள்ளிருந்து சின்னதாய்க் கிளம்பும் ஒரு நீர்க்கசிவு போன்ற விசுவாசம், கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து, பின்னர் பாறையைப் பிளந்து கொட்டும் அருவியாய் மாறும்.
புல்லைப்பற்றிய ஓர் ஆங்கில கவிதை.. எனக்கு மிகவும் பிடித்த கவிதை... கதை என்றும் சொல்லலாம். அண்ணனும் தம்பியும் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும்போது திடீரென தம்பிக்கு ஒரு சந்தேகம். "தைரியம்னா என்னாண்ணே?" என்று அண்ணனிடம் கேட்கிறான். அண்ணன் தனக்குத் தெரிந்தமட்டும் விளக்கப் பார்த்தான். தம்பிக்குப் பாதி விளங்கியது. அப்போது அவர்கள் போய்க்கொண்டிருந்த பாதையில் யாரோ ஒருவர் புல்தரை ஒன்றை எரித்து விட்டிருந்தார். முற்றிலும் எரிந்துபோன புல்தரையின் நடுவில் ஒரு சின்னப் புல் மட்டும் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது. அண்ணன் தம்பியிடம் அந்த புல்லைக் காட்டி, "தம்பி இதுதான் தைரியம்" என்றான். கவிதை இதோடு முடிகிறது. தம்பிக்கு விளங்கியதா இல்லையா என்பதெல்லாம் நமது கவலை இல்லை. அந்தக் காட்சி நமக்கு முக்கியம்.
முற்றிலும் எரிந்து போன ஒரு புல்தரையின் நடுவே நின்றுகொண்டிருக்கும் புல் நமக்கு ஒரு பாடம். தன்னைச்சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில் கலந்து மறைந்து போகாமல் தலை நிமிர்ந்து நிற்பதுதான் தைரியம், அதுதான் விசுவாசம். இத்தகைய விசுவாசத்தை இறுகப் பற்றிக்கொண்டு எசாயா கூறும் வார்த்தைகள் நம் மனதில் ஆணித்தரமாய் பதிய வேண்டும்.

எசாயா 35: 4–7அ
உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்: அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

எசாயாவின் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது இது நடைமுறைக்கு ஒத்து வருமா என்ற எண்ணம் எழும். அழகான கற்பனை. நடக்கவே நடக்காது, முடியவே முடியாது என்று மூடப்பட்ட வாழ்க்கையை, மூடப்பட்ட கல்லறையைத் திறந்து, எழுந்து வரும் விசுவாச வார்த்தைகள் இவை. எசாயாவின் விசுவாச வார்த்தைகள் நமதாக இறைவனை வேண்டுவோம்.

நோயுற்றோரை, வறியோரைச் சந்திக்கும்போது நாம் என்ன நினைக்கிறோம், என்ன செய்கிறோம்? நோய், வறுமை இவற்றைப்பற்றி இஸ்ரயேல் மக்கள் மிகத் தெளிவாக இருந்தனர். நோயும், வறுமையும் பாவத்தின் தண்டனைகள். நோயாளிகள், ஏழைகள் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களைவிட்டு மற்றவர்கள் விலகி இருப்பது நல்லது. அதிலும் ஒரு சில நோய் உடையவர்களைப் பார்த்தாலோ, அல்லது அவர்கள் நிழல்கூட தம்மைத் தீண்டினாலோ, தாங்களும் தீட்டுப்பட்டவர்கள் ஆகிவிடுவோம் என்ற பயம். இந்திய சமூகத்தில் சாதிய அடிப்படையில் தீண்டாமை பற்றிய எண்ணங்கள் இருப்பதை நினைத்துப் பார்ப்பது நல்லது.

யாக்கோபு மடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம் மிகவும் தெளிவான பாடங்களைத் தருகின்றது. ஏழைகளை எப்படி பார்க்கிறோம்? அவர்களை எப்படி நடத்துகிறோம்?
பொதுவாகவே, கிறிஸ்தவர்கள் மத்தியில் இரக்ககுணம் அதிகம் உண்டு. நமது கோவில்கள், நிறுவனங்கள் வழியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஏழைகளுக்கு நாம் பல உதவிகள் செய்கிறோம். உண்மைதான். மறுப்பதற்கில்லை. வறியோரைப் பார்த்து, பரிதாபபட்டு, இரக்கப்பட்டு உதவி செய்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் ஏழைகளை மனிதர்களாக மதிக்கிறோம்? இதுதான் யாக்கோபு மடலில் எழுப்பப்படும் சங்கடமான கேள்வி. ஏழைகளுக்கு உரிய மதிப்பைத் தந்து அவர்களுக்குச் சிறப்புப் பணியாற்றிய அன்னை தெரேசாவை இந்திய மண்ணுக்கு அனுப்பிவைத்த இறைவனுக்கு இவ்வேளையில் நன்றி சொல்வோம்.

வறுமையை ஒரு சாபமாகவும், வறியோர் கடவுளின் தண்டனைக்கு ஆளானவர்கள் என்றும் நம்பி வந்த யூதர்கள் மத்தியில் இயேசு "வறியோர் பேறு பெற்றோர்" என்று மலை உச்சியில் சொன்னார். யூத மதத் தலைவர்களுக்கு இயேசு சொன்னது பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும், தேவ நிந்தனையாகவும் ஒலித்திருக்கும். ஆனால், இதைக் கேட்ட வறியோர் மனதில் நம்பிக்கை பிறந்திருக்கும்.
இயேசு புரட்சிகரமாகப் பேச வேண்டும் அதனால் மக்களை தன் வயப்படுத்த வேண்டும் என்று முயன்றதில்லை. தான் ஆழ்மனதில் நம்பியவைகளை மக்களுக்குச் சொன்னார். வாழ்ந்தும் காட்டினார். அவரது போதனைகளும், எடுத்துக்கொண்ட நிலைப்பாடும், வாழ்ந்த வாழ்வும் யூதர்களுக்கு சவாலாக இருந்தன. இன்றைய நற்செய்தி வழியாக இயேசு இப்படி ஒரு சவாலை நமக்கும் விடுக்கிறார்.

வாய் பேசாத, காது கேளாத ஒருவரை குணமாக்கியப் புதுமையை, தன் வல்லமையை வெளிப்படுத்த இயேசு எடுத்துக்கொண்ட முயற்சியாக பார்க்காமல், யூத சமூகத்திற்கும், இன்று நமக்கும் காட்டும் ஒரு மாற்றுப் பாதையாக பார்க்க வேண்டும்.
இயேசுவிடம் குறையுள்ள அந்த மனிதனை மற்றவர்கள் கொண்டு வந்தனர். அவர் தானாக இயேசுவிடம் வரவில்லை. தன் குறைகளைப் பார்த்து, கடவுளின் தண்டனையை அனுபவிப்பவன் என்று தன்னை முத்திரை குத்திய யூத சமுதாயத்தின் மேல் அவர் வெறுப்பை வளர்த்திருக்க வேண்டும். இயேசுவையும் இந்த யூத சமுதாயத்தில் ஒருவராக நினைத்து அவரை அணுக நோயுற்றவர் தயங்கியிருக்க வேண்டும். அவரை மற்றவர்கள் இயேசுவிடம் கூட்டிவந்ததாக நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம். அவருக்கு நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய நண்பர்கள் இயேசுவிடம் அவரைக் கொண்டு வந்தனர். முடக்குவாதத்தில் கட்டிலிலேயே முடங்கிப்போன ஒருவரை அவரது நண்பர்கள் இயேசுவிடம் சுமந்து வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கலாம்.
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை இன்றும் நாம் சந்தித்து வருகிறோம். நான் கல்லூரியில் பணியாற்றிய போது, தினம், தினம் நான் கண்ட ஓர் அற்புதம் என் நினைவுக்கு வருகிறது. போலியோ நோயினால் கால்கள் இரண்டிலும் சக்தி இழந்த ஒரு மாணவரை அவரது நண்பன் தினமும் சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வருவார். அவர்கள் பாடம் பயின்ற கட்டிடத்தில் லிப்ட் வசதி இல்லாததால், இந்த நண்பன் அவரைக் குழந்தையைப் போல் இரு கரங்களிலும் தூக்கிக்கொண்டு இரண்டு மாடிகள் ஏறுவார். ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல... இந்த அற்புதம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் வாழ்க!

இயேசுவிடம் அவன் நண்பர்கள் அவனைக் கொண்டு வந்ததும் இயேசு செய்தது வியப்பைத் தருகின்றது. “இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி 'எப்பத்தா' அதாவது 'திறக்கப்படு' என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.”
என்று மாற்கு நற்செய்தி 7ம் பிரிவில் வாசிக்கிறோம்.

இயேசுவின் செயல்களில் இருந்து ஒரு சில பாடங்கள்: இயேசு அவர் காதுகளில் கையை வைக்கும்போது, அவரிடம் இயேசு சொல்லாமல் சொல்லியது இதுதான்: "உன்னை இதுவரை அல்லது இனியும் மனம் தளரச்செய்யும் வண்ணம் இந்த உலகம் சொல்வைதைக் கேளாதே. உன் காதையும், நாவையும் நல்ல செய்திகளுக்காகத் திறந்து விடு. வேதனையில், விரக்தியில், நீ வாழ்ந்தது போதும். உன் சிறைகள் திறக்கபடுக. விடுதலை பெற்று நீர் வாழ்க!"

இந்த ஞாயிறு வழிபாட்டிலிருந்து நாம் போகும்போது, இயேசு நம் செவிகளையும், நாவையும், எல்லா புலன்களையும் தொட்டு இதே வார்த்தைகளைச் சொல்லவேண்டும் என வேண்டிக்கொள்வோம். தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக நமது காந்தி சொன்னார். இயேசு நம் ஐந்து புலன்களையும் தொட்டு, நல்லவைகளைப் பார், நல்லவைகளைப் பேசு, நல்லவைகளைக் கேள் நல்லவைகளைச் சுவைத்து வாழ் நல்லவைகளே உன் மூச்சுக் காற்றாக இருக்கட்டும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.

சிறப்பாக வறுமை, பிணி இவற்றில் நாம் சிக்கியிருக்கும்போதும், இந்தச் சிறைகளில் சிக்கி இருப்பவர்களைச் சந்திக்கும்போதும், எசாயாவின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை நமதாக்குவோம். இல்லாதது, முடியாதது என்று ஒன்றும் நம்மை சிறைப் படுத்தாமல் பார்த்துக்கொள்வோம். இறைவன் துணையோடு, நம்பிக்கையோடு வாழ்ந்தால்...
பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும். (எசாயா 35: 5–7அ)

இறை மகனும், ஆரோக்கிய அன்னையும் நமக்குத் துணை செய்வார்களாக. அருளாளர் அன்னை தெரேசா நமக்குப் பரிந்துரை செய்வாராக!








All the contents on this site are copyrighted ©.