2012-09-08 14:13:23

ஆப்ரிக்கத் தெருச்சிறார்/பெண்கள் குறித்த திருப்பீடக் கருத்தரங்கு


செப்.08,2012. ஆப்ரிக்கக் குடும்பங்களின் மாண்பு மற்றும் தனிப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து, டான்சானிய நாட்டு Dar-es-Salaamல் வரும் வாரத்தில் தொடங்கவுள்ள கருத்தரங்கில் கவனம் செலுத்தப்படும் என்று கர்தினால் Antonio Maria Vegliò கூறினார்.
ஆப்ரிக்கத் தெருச்சிறார் மற்றும் ஆப்ரிக்கப் பெண்கள் குறித்து வருகிற செவ்வாய்க்கிழமை(செப்.11-15,2012) தொடங்கவிருக்கும் ஐந்து நாள் கருத்தரங்கு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர் அவைத் தலைவர் கர்தினால் Vegliò இவ்வாறு கூறினார்.
2008ம் ஆண்டில் இலத்தீன் அமெரிக்காவிலும், 2009ம் ஆண்டில் ஐரோப்பாவிலும், 2010ம் ஆண்டில் ஆசியா மற்றும் ஓசியானியாவிலும் இத்தகைய கருத்தரங்கை நடத்தியிருப்பதாகத் தெரிவித்த கர்தினால் Vegliò, இவ்வாண்டு ஆப்ரிக்காவில் நடத்தவிருப்பதாகக் கூறினார்.
இந்தக் கருத்தரங்கில் 31 ஆப்ரிக்க நாடுகளிலிருந்து 15 ஆயர்கள் உட்பட 85 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று கூறினார் கர்தினால் Vegliò.
“இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்(லூக்.24:15)” என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.







All the contents on this site are copyrighted ©.