2012-09-07 16:23:35

பாகிஸ்தான் சிறுமி Rimsha Masih பிணையலில் விடுதலை


செப்.07,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றச்சாட்டின்பேரில் அண்மை வாரங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனநலம் குன்றிய 14 வயதுச் சிறுமி Rimsha Masih பிணையலில் விடுதலை செய்யப்படுமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஒன்று இவ்வெள்ளியன்று ஆணை பிறப்பித்துள்ளது.
இத்தகவலை அறிவித்த தேசிய நல்லிணக்கத்துக்கான பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் Paul Bhatti, இச்செய்தி அனைத்துப் பாகிஸ்தான் சமுதாயத்துக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்திருப்பதாக அறிவித்தார்.
சிறுமி Rimsha Masih விவகாரத்தில் நீதி செயல்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லி பாகிஸ்தான் கிறிஸ்தவரும் கிறிஸ்தவரல்லாதவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனக் கூறியுள்ள கத்தோலிக்க அரசியல்வாதி Paul Bhatti, ரிம்ஷா விவகாரத்தில் அந்நாட்டின் காவல்துறையும் அரசும் ஆற்றிய பணியைப் பாராட்டியுள்ளார்.
மேலும், சிறுமி ரிம்ஷாமீது தேவநிந்தனைக் குற்றம் சாட்டிய இசுலாம் மதகுரு காலித் சிஷ்டி அதே குற்றச்சாட்டின்பேரில் இம்மாதம் முதல் தேதி கைது செய்யப்பட்டார். இவருக்குத் தற்போது ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
காலித் சிஷ்டி என்ற இந்த மதகுரு, அந்தச் சிறுமியிடமிருந்து எடுக்கப்பட்ட ஒரு பையில் எரிந்த சில காகிதங்களுடன் குர்ஆனின் சில பக்கங்களையும் வைத்ததாக சாட்சி ஒருவர் நீதிபதியிடம் கூறியதைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.