2012-09-07 15:59:45

திருத்தந்தை : கிறிஸ்துவில் வேரூன்றிய புனித வாழ்வும், விவேகமும் தொலைநோக்கும் கொண்ட மேய்ப்பர்கள் மறைப்பணிக்குத் தேவை


செப்.07,2012. கிறிஸ்துவில் வேரூன்றிய புனித வாழ்வும், விவேகமும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டு, நற்செய்திக்குத் தாராளமாகத் தங்களையே வழங்க முன்வந்து, அனைத்துத் திருஅவைகளையும் தங்கள் இதயங்களில் ஏற்கும் மேய்ப்பர்கள் மறைப்பணிக்குத் தேவை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, ஓசியானியா ஆகிய பகுதிகளில் அண்மைக் காலத்தில் ஆயர்களாக நியமனம் பெற்ற ஏறக்குறைய நூறு ஆயர்களை காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இவ்வெள்ளிக்கிழமை சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
உரோமையில் திருப்பீட மறைப்பரப்புப் பேராயம் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இந்த ஆயர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, இந்த ஆயர்கள் பணிசெய்யும் நாடுகளில் வளர்ந்து வரும் பல இளம் திருஅவைகள், வருங்கால உலகளாவியத் திருஅவையின் நம்பிக்கையின் ஓர் அடையாளமாக இருக்கின்றன என்று கூறினார்.
மறைப்பரப்புப் பணியிலிருந்து பிறக்கும் திருஅவை, அப்பணியோடு வளர்கிறது என்றும் கூறிய அவர், விசுவாசத்தைச் சரியான முறையில் பண்பாட்டுமயமாக்கி அறிவிப்பதன் மூலம், மக்களின் கலாச்சாரத்தில் நற்செய்தியை வேரூன்றச் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
ஆயர்கள் தங்களது குருக்கள்மீது சிறப்புக் கவனம் செலுத்தி, தங்களது எடுத்துக்காட்டான வாழ்வு மூலம் அவர்களை வழிநடத்தி, தந்தைக்குரிய அன்புடன் அவர்களை வரவேற்று அவர்களோடு ஒன்றித்து வாழுமாறும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, குருக்களுக்குத் தொடர்ப் பயிற்சியளித்து அவர்களது வாழ்வில் திருநற்கருணை எப்போதும் மையமாக விளங்குவதற்கு ஆவன செய்யுமாறும் பரிந்துரைத்தார்.
இந்த ஆயர்களின் தலத்திருஅவைகளில் காணப்படும் சமூக உறுதியற்றதன்மை மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏறபடுத்தி வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இயற்கைப் பேரிடர்கள், மதத் தீவிரவாதம், மதச் சகிப்பற்றதன்மை, மதப் பாகுபாடு, இனச்சண்டை போன்றவற்றாலும் இந்தத் திருஅவைகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார்.
இறைவார்த்தைப் பணி, மக்கள் மத்தியில் ஒப்புரவையும் ஒன்றிப்பையும் வளர்ப்பதாக இருக்குமாறு ஆயர்களிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.