2012-09-05 16:14:53

பாகிஸ்தானில் சிறார் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு


செப்.05,2012. பாகிஸ்தானில் ஒரு கோடிக்கு மேற்பட்ட 10க்கும் 15 வயதுக்கும் உட்பட்ட சிறார் தெருக்களில் குப்பைகளைப் பொறுக்குகின்றனர் என்று சிறார் உரிமைகள் குழு ஒன்று கூறியது.
“பாகிஸ்தான் சிறார் நிலைமை 2011” என்ற தலைப்பில் SPARC என்ற சிறார் உரிமை பாதுகாப்புக் கழகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில், அந்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து இடம்பெற்ற வெள்ளம் காரணமாக ஏறக்குறைய 18 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர் எனவும், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகிலுள்ள நகரங்களில் தெருச் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், நாட்டின் வட பகுதியில் புரட்சியாளர்களால் படைக்கும், தற்கொலை குண்டுவெடிப்புக்கும் தேர்ந்தெடுக்கப்படும் சிறாரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
Khyber Pakhtunkhwa மாநிலத்தில் புரட்சியாளர்கள் 710 பள்ளிகளை அழித்துள்ளனர் அல்லது சேதப்படுத்தியுள்ளனர் என்றும், இதனால் ஆறு இலட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் SPARC வெளியிட்ட ஆண்டறிக்கை கூறுகிறது.
புரட்சியாளர்களின் அச்சுறுத்தலால் 2010ம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு 956 பள்ளிகளை மூடியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.