2012-09-04 15:49:36

சட்டத்தின் சலுகைகளை அனுபவிக்க ஏழ்மை தடையாய் இருக்கக் கூடாது – ஐ.நாஅதிகாரி


செப்.04,2012. வறுமைக்கு எதிராகப் போராடுவது முக்கியமான மனித உரிமை என்று சொல்லி, ஏழைகளுக்கு நீதி கிடைப்பதற்கான வழிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா.வல்லுனர் ஒருவர் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீதி கிடைப்பதற்கு வழிசெய்வது தன்னிலே மனித உரிமையாகும் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கு முக்கியமானதாகும் என்றுரைத்த, கடும் ஏழ்மை ஒழிப்பு குறித்த ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி Magdalena Sepúlveda, வறுமையில் வாடும் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வழிசெய்யாமல் இருக்கும் சட்ட ஒழுங்குகள் அர்த்தமற்றவை என்று குறை கூறினார்.
சட்ட ஒழுங்குகள் குறித்த ஐ.நா. உயர்மட்ட அளவிலான கூட்டம் இம்மாதம் 24ம் தேதி நடைபெறவிருப்பதையொட்டி உறுப்பு நாடுகளுக்கு இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளார் Sepúlveda.
சட்ட ஒழுங்குகளை அனுபவிப்பதற்கு ஏழ்மை ஒருபோதும் தடையாய் இருக்கக் கூடாது எனவும், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும் Sepúlveda கேட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.