2012-09-04 15:57:17

இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்ப முடியாது : ஆஸ்திரேலிய அரசு


செப்.04,2012. இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கேட்கும் அனைவரையும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் கூறியிருப்பதை அந்நாட்டின் அரசும், அகதிகளுக்காக குரல்கொடுப்பவர்களும் வன்மையாகக் கண்டித்திருக்கின்றனர் எனச் செய்திகள் கூறுகின்றன.
இலங்கை அகதிகள் ஆஸ்திரேலிய சட்ட விதிமுறைகளுக்குள் வருவதற்கு முன்னரே, அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வசதியாக இலங்கை அரசுடன் ஆஸ்திரேலிய அரசு ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இலங்கையிலிருந்து தஞ்சம் கோருபவர்கள், பொருளாதார நோக்கத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதால் அவர்கள் அகதிகள் அல்ல என்று எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஜூலி பிசப் கூறியுள்ளார்.
ஆயினும், ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியினரின் கூற்றுக்குப் பதிலளித்த அந்நாட்டு குடியேற்றதாரர் துறையின் அமைச்சர் கிறிஸ் போவன், ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கேட்கும் இலங்கை மக்களின் கோரிக்கைகளை ஐநாவின் அகதிகளுக்கான விதிமுறையின் அடிப்படையில் கையாள வேண்டிய கடமை ஆஸ்திரேலிய அரசுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஆஸ்திரேலிய கிறிஸ்தவசபைகளின் கூட்டமைப்பும், அகதிகளை ஏற்பதை அந்நாடு மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் இந்தத் திட்டம் மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று அகதிகளுக்காகக் குரல் கொடுக்கும் மற்ற ஆர்வலர்களும் கூறியுள்ளனர்.
நடுக்கடலில் படகில் தவித்த இலங்கையர்கள் 50 பேர் இந்தோனேசிய மீனவர்களால் மீட்கப்பட்டதாக வந்த செய்திகளையடுத்து, ஜூலி பிசப் இலங்கை அகதிகள் குறித்த தனது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
குழந்தைகள், பெண்கள் உட்பட இந்தப் படகில் வந்தவர்கள் நடுக்கடலில் பசியுடனும், நீர்ச்சத்து குறைந்தும் துன்புற்றனர் எனவும் கூறப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.