2012-09-04 15:46:11

ஆசியத் திருஅவை டிஜிட்டல் உலகத்தில் நற்செய்தி அறிவிக்க வேண்டும்


செப்.04,2012. ஆசியத் திருஅவை டிஜிட்டல் உலகத்தில் நற்செய்தி அறிவிப்பதற்கு, இந்தத் துறையில் முன்னேறியுள்ள வத்திக்கான் வானொலியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாங்காக் புனித யோவான் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் Chainarong Monthienvichienchai கூறினார்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்றுவரும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் BISCOM என்ற சமூகத்தொடர்பு ஆணையம் நடத்தும் 8வது கூட்டத்தில் உரையாற்றிய Chainarong, டிஜிட்டல் கலாச்சாரத்தில் ஒவ்வொருவரது கருத்தும் மதிப்புமிக்கது என்று கூறியதாக, இக்கூட்டத்தில் பங்கு கொள்ளும் வத்திக்கான் வானொலியின் இயேசு சபை அருள்தந்தை Joseph Paimpalli செய்தி அனுப்பியுள்ளார்.
இணையதளத்தில் ஒருவர் தனது கருத்துக்களைப் பதிவு செய்தால் அவற்றுக்கு மற்றவர்கள் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர், எனவே டிஜிட்டல் கலாச்சாரத்தில் ஒவ்வொருவரது கருத்தும் மதிப்புமிக்கது என்று Chainarong தெரிவித்தார்.
சிற்றலை, பண்பலை போன்ற பாரம்பரியத் தொழில்நுட்பங்களிலிருந்து புதிய வகை தொழில்நுட்பங்களை வளர்க்க வேண்டிய காலம் கனிந்துள்ளது என்று வத்திக்கான் வானொலி இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி அண்மையில் கூறியதைக் குறிப்பிட்டுப் பேசிய Chainarong, கடந்த ஜூலை முதல் தேதியிலிருந்து வத்திக்கான் வானொலியின் வரலாற்றில் புதிய அத்தியாயம் திறக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
வருகிற வெள்ளிக்கிழமைவரை நடைபெறும் இக்கூட்டத்தில் 12 தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து 14 ஆயர்கள் உட்பட 45 பேர் கலந்து கொள்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.