2012-09-04 15:42:20

அமெரிக்க ஐக்கிய நாட்டில் தேசிய அளவில் பொருளாதாரப் புதுப்பித்தல் இடம்பெறுமாறு ஆயர்கள் வேண்டுகோள்


செப்.04,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடுமையாக உழைக்கும் ஒரு கோடிக்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத அளவுக்கு மிகக் குறைந்த ஊதியத்தைப் பெறுகின்றன என்று அந்நாட்டு ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இத்திங்களன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய தொழிலாளர் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்ற ஆணையத் தலைவர் ஆயர் Stephen E. Blaire, தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பலர் வேலையிழந்திருப்பதையும், அதனால் குடும்பங்கள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்நாட்டில் ஒரு கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை தேடுவதாகவும், இலட்சக்கணக்கானவர்கள் வேலை தேடுவதையே நிறுத்தி விட்டதாகவும், 4 கோடியே 60 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்வதாகவும், ஒரு கோடியே 60 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் வறுமையிலே வளர்வதாகவும் அச்செய்தி கூறுகிறது.
நாட்டின் பொருளாதார வாழ்வில் தொழிலாளர்களையும், அவர்களது குடும்பங்களையும் மையப்படுத்தும் நாடு தழுவிய பொருளாதாரப் புதுப்பித்தல் இடம்பெறுமாறும் அமெரிக்க ஆயரின் செய்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.