2012-09-03 15:50:37

வாரம் ஓர் அலசல் – “நான் எனது நகரத்தை மாற்றுவேன்”


செப்.03,2012 RealAudioMP3 . உரோமைப் பேரரசு உருவெடுத்துக் கொண்டிருந்த காலம் அது. பலர் வெவ்வேறு பகுதிகளில் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். தெருவில் போய்க் கொண்டிருந்த அறிஞர் ஒருவர், ஒரு தொழிலாளியைப் பார்த்து, “நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அந்தத் தொழிலாளி, “நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என உமக்குத் தெரியவில்லையா? என் வயிற்றுப்பாட்டுக்காகக் கல் உடைத்துக் கொண்டிருக்கின்றேன்” என்றார். சிறிது தூரம் சென்று அதே கேள்வியை மற்றொரு தொழிலாளியிடம் கேட்டார் அந்த அறிஞர். அதற்கு அந்தத் தொழிலாளி, “நான் ஒரு கல்தூணை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன்” எனப் பதில் சொன்னார். இன்னும் சிறிது தூரம் தள்ளிப்போய் அதே கேள்வியை மூன்றாவது தொழிலாளியிடம் கேட்டார் அந்த அறிஞர். அதற்கு அந்தத் தொழிலாளி, “நான் பலரோடு சேர்ந்து ஒரு பெரிய கோவிலைக் கட்டிக் கொண்டிருக்கின்றேன்” எனப் பதில் சொன்னார். இந்த நிகழ்வில் முதல் தொழிலாளிக்குத் தன்மீது மட்டுமே கவனம் இருந்தது. ஆனால் தனது தொழில் மீது கவனம் இல்லை. இரண்டாவது தொழிலாளிக்குத் தனது அன்றையத் தொழில்மீது மட்டும் கவனம் இருந்தது. ஆனால் மூன்றாவது தொழிலாளிக்குப் பெரிய முழுமையான குறிக்கோள்மீது கவனம் இருந்தது. எனவே முழுமையான குறிக்கோளுடனும், இலக்குடனும் செய்கின்ற செயலில்தான் வெற்றி கிட்டும்.
உலகில், நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளில் தாராளமயமாக்கல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் வெளிநாடு செல்லும் குடியேற்றதாரரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த இலக்கு தவிர, உள்நாட்டுப் போர்கள், வறட்சி, வறுமை, பசி பட்டினி போன்ற காரணங்களாலும் பெருமளவில் மக்கள் புலம் பெயர்கின்றனர். 2010ம் ஆண்டில் வெளியான ஒரு புள்ளிவிபரத்தின்படி, 7 கோடியே 79 இலட்சம் ஆசியர்களும், 3 கோடியே 60 ஆயிரம் ஆப்ரிக்கர்களும், 5 கோடியே 67 இலட்சம் ஐரோப்பியர்களும், 3 கோடியே 62 இலட்சம் அமெரிக்கர்களும் வேற்று நாடுகளில் வேலை செய்கின்றனர் எனத் தெரிகிறது. இன்று உலக மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள், மாநகரங்களிலும் சிறிய நகரங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் ஒரு தலைமுறைக்குள் இவ்வெண்ணிக்கை 70 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும் ஒரு புள்ளி விபரம் எச்சரிக்கிறது. 2012ம் ஆண்டில் வெளியான ஓர் ஆய்வில், உலகில் நல்ல வாழ்க்கைத்தரமுள்ள நாடுகளின் பட்டியலில் முதலாவதாக சுவிட்சர்லாந்தும், இரண்டாவதாக ஜெர்மனியும் இடம்பெற்றுள்ளன. அதேநேரம், வேலையும் வாழ்க்கையும் சமநிலையில் இருக்கும் 23 நாடுகளில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் பெங்களூரு நகரம் முதலிடம் பெற்றுள்ளது.
சென்னை நகரத்துக்கு இந்த ஆகஸ்ட் 22ம் தேதியோடு 373 வயதாகிறது. தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னையில் அன்றையக் காலத்தில், தெளிந்த நீராக ஓடிய கூவம், அடையாறு போன்றவை, இன்று மக்கள் நெருக்கத்தால் சாக்கடை செல்லும் கால்வாயாக மாறிவிட்டன. இம்மாநகரத்தில், எங்கு நோக்கினும் நலவாழ்வுப் பிரச்சனை. நடைபாதைகள்கூட, மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் நிலையில் இல்லை. ஒரு தெருவில், 40 வீடுகள் இருந்த நிலை மாறி, தற்போது, 400 வீடுகள் வந்துவிட்டன. சென்னை மட்டுமல்ல, இன்று உலகில் பெரும்பாலான நகர்ப்புறங்களின் தூசியும், வாகனங்களின் புகையும், சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி, மனித வாழ்வியலின் இருப்பிற்கே உலை வைத்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவாக வாகனங்கள் வெளியிடும் புகையைச் சுவாசிக்கும் ஒருவர், இருபது சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமமாகிறார். ஹைட்ரோகார்பன்கள், கார்பன் மோனாக்சைட், கார்பன்டையாக்சைட், ஈயம், பென்சீன் போன்றவற்றை, அளவுக்கு அதிகமாகச் சுவாசிப்பதால் பல்வேறு நுரையீரல் கோளாறுகளும், சுவாசச் சிக்கல்களும் ஏற்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். அதேசமயம் மாநகரங்களில் குடியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே நகரங்களின் எதிர்காலம் இன்றைய இளையோரிடம் இருக்கின்றது என்பதை வலியுறுத்தி தென் இத்தாலியின் நேப்பிள்ல்ஸ் மாநகரில் இஞ்ஞாயிறன்று, 6வது உலக நகரங்களின் கருத்தரங்கு தொடங்கியுள்ளது. வருகிற வெள்ளிக்கிழமைவரை நடைபெறும் இக்கருத்தரங்கில் 114 நாடுகளிலிருந்து ஏறக்குறைய பத்தாயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். நகரங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல், செல்வங்களும் பிற வாய்ப்புக்களும் சமமாகப் பங்கிடப்படுதல், இதில் இளையோரின் பங்கு ஆகிய தலைப்புக்களில் சொற்பொழிவுகளும் கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற்று வருகின்றன. புது மாறுதல்களை அடைந்து வரும் மாநகரங்கள் குறித்த அருங்காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த கருத்தரங்கு நடக்கும் நேப்பிள்ல்ஸ் துறைமுக நகரில் ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் வாழ்கின்றனர். இவ்வுலகக் கருத்தரங்கு குறித்து ஐ.நா.அதிகாரி ஒருவர் பேசுகிறா RealAudioMP3 ர்......
இந்த நேப்பில்ஸ் உலகக் கருத்தரங்கில் சில புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டு இளையோருக்குச் சிறப்பான அழைப்பும் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த 21ம் நூற்றாண்டில் நகரங்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் கருவிகள் இளையோர். இவர்கள்தான் இன்றைய மனித சமுதாயத்தின் வளங்கள். இன்று உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 300 கோடிப் பேர் 25 வயதுடைய இளையோர். 130 கோடிப் பேர் 12க்கும் 24 வயதுக்கும் உட்பட்டவர்கள். இந்த இளையோர் பெருமளவில் பெருநகரங்களிலும் சிறிய நகரங்களிலுமே வாழ்கின்றனர். உலகில் விரிவடைந்துவரும் நகரங்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான நகரங்கள் வளரும் நாடுகளில் உள்ளன. நகரங்களில் வாழ்வோரில் சுமார் 60 விழுக்காட்டினர் 2030ம் ஆண்டுக்குள் 18 வயதுக்கு உட்பட்டோராய் இருப்பார்கள். எனவே எதிர்கால நகரங்களின் நலவாழ்வும் நல்வாழ்வும் இளையோரை நம்பித்தான் இருக்கின்றன. ஆதலால் “நான் எனது நகரத்தை மாற்றுவேன்” என்ற உறுதியோடு இளையோர் பணி செய்யுமாறு அழைக்கிறது இக்கருத்தரங்கு.
வெப்பநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்களின் பாதிப்பு ஆகியவற்றின் விளைவுகளை நகரங்கள் எதிர்கொள்வதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பசுமை நகரங்களை அமைப்பதற்கும் இளையோர் முன்வரவேண்டும். அண்மைக் காலமாக கைபேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டே போகிறது. கைபேசி பயன்படுத்துபவருக்கு கதிர்வீச்சு மூலம் கொடிய வியாதிகள் பரவும் அபாயம் உள்ளது. கழிப்பறைகளில் இருக்கும் நுண்கருமிகளைவிட கைபேசியில் உள்ள நுண்கருமிகளிவின் அளவு 10 மடங்கு அதிகம் இருப்பதாக இத்திங்கள் செய்திகள் கூறுகின்றன. கைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள் தங்களது கைபேசிகளைச் சுத்தம் செய்வதில்லை. மேலும், தாங்கள் பயன்படுத்தும் கைபேசிகளை மற்றவர்களுக்குப் பேசக் கொடுக்கும்போது அவர்களிடம் உள்ள நுண்கருமியும் இதில் ஒட்டிக்கொள்கிறது. அதைப்போல, ஏடிஎம் கருவிகளிலும் இந்த நுண்கருமிகள் அதிகம் காணப்படுவதாக ஆஸ்திரேலியாவின் சிட்னியில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, இந்திய மத்திய அரசு இப்போது எடுத்துள்ள ஒரு நடவடிக்கை கொஞ்சம் திருப்தியளிக்கிறது. கைபேசிக் கோபுரத்துக்கும், அதனருகே அமையும் வீட்டிற்கும் இடையே குறைந்தபட்சம் 35 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான கைபேசிக் கோபுரங்கள் உள்ளன. இன்னும், நகரங்களின் கட்டிடங்கள் மட்டும் 30 விழுக்காட்டு வாயுக்களை வெளியேற்றி சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றன. எனவே வருங்காலத்தில் நலவாழ்வுக்கு அச்சுறுத்தல் இல்லாத கார்பன் பாதிப்பில்லாத கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்கெல்லாம் பொறுப்பானவர்கள் இன்றைய இளையோர். இவர்களால் நகர்ப்புறமயமாதலில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை மாற்ற முடியும் என்று இந்த நேப்பில்ஸ் கருத்தரங்கு உறுதிபடச் சொல்கிறது. எனவே இளையோரே, மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாக, பசுமை நகரங்களை வருங்காலத்தில் அமைப்பது உங்கள் மனங்களில்தான் இருக்கின்றது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென அறிவாளர்கள் சொல்வதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
நல்ல விளைச்சலை எதிர்நோக்கும் விவசாயி முதலில் நிலத்தைப் பண்படுத்துகிறார். பின்னர் எந்தப் பயிரை எந்தப் பருவத்தில் பயிர் செய்தால் விளைச்சல் மிகுதியாக இருக்கும் என்ற தெளிவுடன் பயிர் செய்கிறார். இதேபோல்தான் மனிதரது சாதனையும் தக்க தருணத்தில் பயிர் செய்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். மனிதரின் வாழ்வில் இளமைப் பருவம் துடிப்பான பருவமாகும். எனவே வெற்றிக்கான விதைகளும் உரமும் இளமையிலேயே பயிர் செய்யப்பட வேண்டும். இதற்கு முதலில் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும். அடுத்து, தீர்மானித்த இலக்கை அடைவதற்கு சரியான வியூகத்தைத் திட்டமிட வேண்டும். ஏனெனில் திட்டமிடலே இல்லாமல் சிறந்த இலக்கும், திறமையும் உழைப்பும் இருந்தாலும் நாம் தேர்ந்தெடுத்த இலக்கை அடைவது கடினம். செய்யக்கூடாததை செய்வது தவறு. ஆனால் செய்ய வேண்டியதை காலத்தால் செய்யாமல் விடுவது அதைவிடப் பெரிய தவறு என்பதை இளையோர் உணர்ந்திருக்க வேண்டும்.
ஐஸ்வர்யா, ஆட்டிசம் எனப்படும் உளவியல் ரீதியிலான குறைபாடுள்ள பெண். இவரிடமுள்ள சிறப்புத்திறன், புதிர் விளையாட்டு அட்டைகளை ஒன்று சேர்ப்பதுதான். பொதுவாக, சராசரியான குழந்தைகள், 50 துண்டுகள் வரை ஒன்று சேர்ப்பார்கள். அதற்கே மணிக்கணக்கில் ஆகிவிடும். ஆனால் ஐஸ்வர்யா 1,500 துண்டுகளை ஒன்று சேர்க்கும் திறன் பெற்றிருக்கிறார். இந்தச் சாதனைக்கு ஐஸ்வர்யா, இளமையில் செய்த பயிற்சியே காரணம் என அவரது தாய் கிரிஜா சொல்கிறார் என இத்திங்கள் செய்தியில் இருந்தது. இளையோரே, இலண்டனில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்ஸ் நடந்து வருகிறது. அதில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரின் ஆர்வத்தைக் கவனித்தீர்களா? இவர்களின் இந்தச் சாதனைகளுக்கு அடித்தளம் என்னவெனச் சிந்தித்தீர்களா?.
அந்தப் பள்ளியில் தற்காப்புக்கலையைக் கற்றுக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் தனது ஆசிரியரிடம் “நான் எனது தற்காப்புக்கலையில் மேலும் அதிகமாகத் தேர்ச்சி பெற விரும்புகிறேன். அதனால் மற்றோர் ஆசிரியரிடமும் தற்காப்புக்கலையைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இது பற்றிய உங்கள் கருத்து என்ன”வெனக் கேட்டான். அதற்கு அந்த ஆசிரியர், “ஒரே நேரத்தில் இரண்டு முயல்களையும் விரட்டிக்கொண்டு ஓடும் வேடன் எந்த ஒன்றையும் பிடிக்க மாட்டான்” என்று பதில் சொன்னாராம்.
அதேபோல், இளையோரே நீங்களும் அடிக்கடி உங்கள் இலக்கை மாற்றிக்கொண்டிருந்தால் ஓர் இலக்கையும் அடைய முடியாது. நிர்ணயித்த இலக்கில் கவனமுடன் பயணம் செய்யுங்கள். ஏனெனில் எதிர்கால நாடும் நகரங்களும் உங்களை நம்பியே இருக்கின்றன.







All the contents on this site are copyrighted ©.