2012-09-03 16:45:01

போலியான மத உணர்வுக்கு எதிராகத் திருத்தந்தை எச்சரிப்பு


செப்.03,2012. மதத்தை இரண்டாம்தர நிலைக்குக் குறைத்துப் பார்க்கும் ஆபத்து ஒவ்வொரு மதத்திலும், ஏன் கிறிஸ்தவத்திலும் பரவியிருப்பதைக் காண முடிகின்றது என்று இஞ்ஞாயிறன்று எச்சரித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோமைக்குத் தென்கிழக்கே 15 மைல் தூரத்தில் அல்பானோ ஏரிக்கு மேலேயுள்ள குன்றுகளில் அமைந்துள்ள காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, நமது மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் இவ்வுலகப் பொருள்களிலும் அதிகாரத்திலும் மற்ற கண்கவர்ப் பொருள்களிலும் வைக்கும் போலியான சமய உணர்வை எச்சரித்தார்.
கடவுளின் திருச்சட்டத்தைத் தமது வாழ்வில் ஏற்று அதனை முழுமையாய் வாழும் ஒவ்வொருவருக்கும் அச்சட்டம் விடுதலையைக் கொண்டு வருகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, மனிதரை வாழ்வின் பாதையில் வழிநடத்தி, தன்னல அடிமைத்தனத்தினின்று விடுதலை செய்து, உண்மையான சுதந்திரம் மற்றும் வாழ்வின் பூமியை அவருக்கு அறிமுகம் செய்யும் கடவுளின் திருவார்த்தையே கடவுளது திருச்சட்டமாகும் என்றும் கூறினார்.
இதனாலே திருச்சட்டம் விவிலியத்தில், அதிகப்படியான வரையறையைக் கொண்டுள்ள சுமையாகப் பார்க்கப்படவில்லை, ஆனால் அது நம் ஆண்டவரது மிக விலையுயர்ந்த கொடையாகவும், அவரது தந்தைக்குரிய அன்புக்குச் சான்றாகவும், தமது மக்களோடு நெருங்கி இருந்து அன்பு வரலாறு எழுதுவதற்கான அவரது ஆவலாகவும் இருக்கின்றது என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.
அதேநேரம், கடவுளின் திருச்சட்டமும், மதமும் தங்களது உண்மையான அர்த்தத்தை இழப்பது குறித்த ஆபத்தைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கடவுளின் திருச்சட்டத்தை வாழ்வதன் உண்மையான பொருள் கடவுளுக்குச் செவிமடுத்து வாழ்வதாகும் எனக் கூறினார்.
மேலும், இம்மூவேளை செபத்தின் இறுதியில் அங்குச் சென்றிருந்த லெபனன் திருப்பயணிகளைப் ப்ரெஞ்ச் மொழியில் வாழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இம்மாதம் 14 முதல் 16 வரை அந்நாட்டுக்குத் தான் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதைக் குறிப்பிட்டு அந்நாட்டு அரசுத்தலைவருக்குத் தனது நல்வாழ்த்தையும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.