2012-09-03 16:49:19

சிறுமிக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டு : பாகிஸ்தான் இமாம் கைது


செப்.03,2012. பாகிஸ்தானில் 14 வயது கிறிஸ்தவச் சிறுமி Rimsha Masih, குர்-ஆனின் பக்கங்களை எரித்ததன் மூலம் இஸ்லாத்தை இழிவுபடுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், அச்சிறுமி மீது குற்றச்சாட்டு எழக் காரணமாக இருந்த இசுலாமிய மதபோதகர் ஒருவர் ஆதாரத்தைப் புனைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தற்போது கைதாகியுள்ளார்.
காலித் சிஷ்டி என்ற இந்த மதபோதகர், அந்தப் பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பையில் எரிந்த சில காகிதங்களுடன் குர்ஆனின் பக்கங்களையும் வைத்ததாக சாட்சி ஒருவர் நீதிபதியிடம் கூறியதைத் தொடர்ந்து இக்கைது இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட ரீதியில் தனக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்குவதற்கும், அடுத்தவர் சொத்தை அபகரிப்பதற்கும், பாகிஸ்தானின் மத சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுப்பதற்கும் தேவநிந்தனைச் சட்டத்தை தவறான முறையில் சிலர் பயன்படுத்துவதாகப் பலமுறை குற்றம்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், கிறிஸ்தவர்களைப் பாகிஸ்தானின் ஹைதராபாத் பகுதியிலிருந்து வெளியேற்ற இந்த உத்தியை இசுலாமிய இமாம் காலித் சிஷ்டி பயன்படுத்தியதாகச் சாட்சிகள் உரைத்துள்ளனர்.
மதநிந்தனைச் சட்ட வழக்குகள் பலவற்றில் சக முஸ்லிம்களும் குற்றம்சாட்டப்படுள்ளனர் என்றாலும், தங்களை இலக்குவைத்துதான் இந்தச் சட்டம் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கிறிஸ்தவர்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.