2012-09-01 14:56:52

வரதட்சணை கேட்போருக்கான தண்டனை உயர்கிறது


செப்.01,2012. இந்தியாவில் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவோருக்கானத் தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
வரதட்சணை கொடுமை ஒழிப்புச் சட்டத்தில், சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், இதன்படி, திருமணத்தின் போது அன்பளிப்பாக கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும் எனவும், இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஆறு மாதம் முதல், ஓர் ஆண்டுவரைச் சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் குற்றத்துக்கான சிறைத்தண்டனை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்தப்படும். ஆனால், வரதட்சணை தருவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஒரு ஆண்டாக குறைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் பெற்றோரே அதிகம் பாதிக்கப்படுவோராக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும், வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் புகார் செய்யும் பெண், அதற்கான நிவாரணம் பெறவும் வழிவகை செய்யப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.