2012-09-01 14:48:33

டாக்கா உயர்மறைமாவட்டத்தின் 125ம் ஆண்டைச் சிறப்பிப்பதற்குத் திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் O’Connor


செப்.01,2012. பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உயர்மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 125ம் ஆண்டைச் சிறப்பிப்பதற்கு, தனது சிறப்புப் பிரதிநிதியாக இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டரின் முன்னாள் பேராயர் கர்தினால் Cormac Murphy-O’Connorஐ இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
டாக்கா உயர்மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 125ம் ஆண்டு மற்றும் பங்களாதேஷில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 400ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதியாக கர்தினால் O’Connor கலந்து கொள்வார்.
இக்கொண்டாட்டங்கள் வருகிற நவம்பர் 9, 10 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1850ம் ஆண்டு திருத்தந்தை 9ம் பத்திநாதரால் கிழக்கு வங்காளத்தின் அப்போஸ்தலிக்கப் பகுதியாக உருவாக்கப்பட்ட டாக்கா உயர்மறைமாவட்டம், 1886ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி மறைமாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 1887ம் ஆண்டில் டாக்கா மறைமாவட்டம் எனவும் பெயரிடப்பட்டது. 1950ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி திருத்தந்தை 12ம் பத்திநாதரால் உயர்மறைமாவட்ட நிலைக்கு உயர்த்தப்பட்டது. 1982ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி இதனை டாக்கா உயர்மறைமாவட்டமாக அறிவித்தார் திருத்தந்தை அருளாளர் 2ம் ஜான் பால்.







All the contents on this site are copyrighted ©.