2012-09-01 10:13:03

கர்தினால் கார்லோ மரிய மர்த்தினி தனது 85வது வயதில் இறைபதம் அடைந்தார்


செப்.01,2012. 1927ம் ஆண்டு இத்தாலியின் தூரின் நகரில் பிறந்த கர்தினால் மர்த்தினி, தனது 17வது வயதில் 1944ம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். 1952ம் ஆண்டில் குருவானார். உலகப் புகழ்பெற்ற விவிலிய நிபுணரான இவர், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைகழகம் மற்றும் பாப்பிறை விவிலிய நிறுவனத்தின் விவிலியத்துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1969ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டுவரை இவ்விரண்டு நிறுவனங்களின் அதிபராகவும் இருந்தார். விவிலிய நிபுணர் என்ற வகையில், பல விவிலியத் தலைப்புக்களிலும், புனித இலெயோலா இஞ்ஞாசியாரின் ஆன்மீகம் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். இவரின் நூல்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய உயர்மறைமாவட்டங்களில் ஒன்றான மிலான் பேராயராக 1979ம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் நியமிக்கப்பட்டார். திருஅவைக்கும் நவீன உலகுக்கும் இடையே உரையாடலை ஊக்குவித்ததில் சிறந்தவர் என்று ஊடகங்களால் பாராட்டப்படுகிறார் கர்தினால் கார்லோ மரிய மர்த்தினி. விவிலியத்தின் மீது தணியாத் தாகம் கொண்ட கர்தினால் மர்த்தினி, பணி ஓய்வு பெற்ற பின்னர் எருசலேம் சென்றார். நோய் முற்றியதும் எருசலேமிலிருந்து இத்தாலி திரும்பினார். இவர் 16 ஆண்டுகள் பார்க்கின்சன் நோயால் துன்புற்று ஆகஸ்ட் 31ம் தேதி பிற்பகல் 03.45 மணிக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ்ந்து நிற்க தனது ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தார் கர்தினால் கார்லோ மரிய மர்த்தினி.







All the contents on this site are copyrighted ©.