2012-09-01 14:50:34

Genfest அனைத்துலக இளையோர் கூட்டத்துக்குத் திருத்தந்தை செய்தி


செப்.01,2012. ஹங்கேரி நாட்டு புடாபெஸ்ட் நகரில் இவ்வெள்ளிக்கிழமையன்று தொடங்கியுள்ள Genfest 2012 என்ற Focolare இயக்கம் நடத்தும் அனைத்துலக இளையோர் மாநாட்டுக்குச் செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
“பாலம் அமைப்போம்” என்ற தலைப்பில் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் இந்தக் கொண்டாட்டங்களுக்கு இந்த புடாபெஸ்ட் நகரே இளையோருக்குப் பல விதங்களில் நல்ல தூண்டுதல்கள் தரும் அடையாளங்களைக் கொண்டுள்ளது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள இச்செய்தியில் திருத்தந்தையின் இக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
புடா மற்றும் பெஸ்ட்டின் முன்னாள் குடியிருப்புக்களை இணைக்கும் எண்ணற்ற பாலங்கள் இரண்டாம் உலகப்போரின்போது அழிக்கப்பட்டுவிட்டன, எனினும் அந்தக் கொடும் சண்டையில் மிஞ்சிய சாம்பல்களிலிருந்து உண்மையான அடித்தளங்கள் மீதான நிலையான அமைதியைக் கட்டி எழுப்புவதற்கு எடுக்கப்பட்ட உறுதி, Focolare இயக்கத்தை ஆரம்பிப்பதற்குத் தூண்டுதலாக இருந்தது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதியுடன் புடாபெஸ்டும் சேர்ந்து சர்வாதிகார ஆட்சியில் அதிகம் தொடர்ந்து துன்புற்றது, எனினும், பனிப்போர் முடிந்த பின்னர் சுதந்திரத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் புதிய நம்பிக்கை வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன எனவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்த அழகான நம்பிக்கையின் அடையாளம் இளையோரிலும் தூண்டுதலை ஏற்படுத்தும் என்ற திருத்தந்தையின் நம்பிக்கையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஞ்ஞாயிறன்று நிறைவடையும் Genfestன் இந்தப் பத்தாவது மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 12,500 பேர் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டுக்கு மூவாயிரம் தன்னார்வப் பணியாளர்களும் உதவி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.