2012-08-31 15:50:33

எத்தியோப்பியத் தலத்திருஅவை பிரதமர் Zenawiயை நினைவுகூருகின்றது


ஆக.31,2012. எத்தியோப்பியாவில் இம்மாதம் 20ம் தேதி இறந்த அந்நாட்டுப் பிரதமர் Meles Zenawi அந்நாட்டை நல்லதொரு மாற்றத்திற்குக் கொண்டு சென்றார் என்று தலைநகர் Addis Ababa பேராயர் Berhaneyesus Demerew Souraphiel கூறினார்.
எத்தியோப்பியாவின் நீண்டகாலப் பிரதமர் Zenawiன் உடல் வருகிற ஞாயிறன்று அனைத்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவிருப்பதையொட்டி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Berhaneyesus இவ்வாறு கூறினார்.
வறட்சி, பஞ்சம், பட்டினி, உள்நாட்டுப் போர், கலவரங்கள் போன்ற பிம்பங்களைப் பராம்பரியமாகக் கொண்டிருந்த எத்தியோப்பியாவின் அந்தப் பிம்பங்களை மாற்றுவதற்கு மறைந்த பிரதமர் Zenawi மிகுந்த முயற்சி செய்தார் எனவும் பேராயர் Berhaneyesus கூறினார்.
இவர் தனது வாழ்வில் முதல் கட்டமாக, அந்நாட்டின் சர்வாதிகாரி Mengistu Hailemariam ஆட்சிக்கு எதிராகப் போராடினார், இரண்டாவதாக நாட்டில் ஏழ்மையை ஒழிக்கப் போராடினார் என்றும் பேராயர் தெரிவித்தார்.
1991ம் ஆண்டில் அரசியலுக்கும் 1994ம் ஆண்டில் பிரதமர் பதவிக்கும் வந்த Meles Zenawi, ஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் பகுதியின் அரசியலில் முன்னணி வகிப்பவராக நோக்கப்படுகிறார். இவரது அடக்கச்சடங்கில் பல ஆப்ரிக்கத் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
எத்தியோப்பியாவின் 80 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில் இப்போதுதான் முதல்முறையாக அரசு மரியாதையுடன் ஓர் அடக்கச்சடங்கு நடைபெறவிருக்கின்றது.
Zenaw, நீண்டகாலம் நோயால் துன்புற்று இம்மாதம் 20ம் தேதி காலமானார்.







All the contents on this site are copyrighted ©.