2012-08-31 15:59:20

உணவுப் பொருட்களின் விலை கடந்த ஜூலையில் 10 விழுக்காடு அதிகரிப்பு : உலக வங்கி அதிர்ச்சித் தகவல்


ஆக.31,2012. உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை கடந்த ஜூலையில் 10 விழுக்காடு உயர்ந்துள்ளது எனவும், இது ஏழைநாடுகளில் வாழ்வாதாரம் குறித்த பயத்தை அதிகரித்துள்ளது எனவும் உலக வங்கி எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு வெப்பக்காற்றும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சியும் இந்த விலைவாசி உயர்வுக்குக் காரணங்களாகச் சுட்டிக்காட்டிய உலக வங்கி, இந்த வறட்சியினால் சோளம், சோயாபீன்ஸ், கோதுமை போன்ற தானியங்களின் உற்பத்திக் கடுமையாகச் சரிந்து விட்டது எனவும் கூறியது.
இதனால் ஆப்ரிக்காவின் வடக்குப் பகுதி, சஹாராவையடுத்த நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.
உலகளவில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் குறித்து உலக வங்கித் தலைவர் Jim Yong Kim இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விலைவாசி உயர்வு குறித்து எச்சரித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.