2012-08-30 15:26:06

பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ள சிறுமி Rimsha Masihயின் வழக்கு ஆரம்பம்


ஆக.30,2012. தேவநிந்தனை சட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ள சிறுமி Rimsha Masihயின் வழக்கு தொடர்பாக மக்களிடையே உணர்வுகள் அதிகமாய் எழுவதால், இவ்வழக்கைத் திசைதிருப்பும் ஆபத்து உள்ளது என்று லாகூர் உயர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் செபஸ்டின் ஷா கூறினார்.
Rimsha Masihயின் வழக்கு இவ்வியாழனன்று நீதிமன்றத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கைக் குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள உணர்வு கொந்தளிப்புக்களால் 300க்கும் அதிகமான சிறுபான்மை மதங்களைச் சார்ந்த குடும்பங்கள் இஸ்லாமாபாதிலிருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மக்களிடையே நிலவும் இந்தச் சூழலைக் குறித்து Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்குப் பேட்டியளித்த ஆயர் ஷா, Rimsha Masihயின் குடும்பத்தினரை இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony சென்று சந்தித்ததையும் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
சிறுமி Rimsha மூளை வளர்ச்சிக் குன்றியவர் என்பதற்கு மருத்துவ ஆதாரங்கள் தகுந்த அளவில் உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கத்தோலிக்க வழக்கறிஞர் பீட்டர் ஜேக்கப், இஸ்லாமியர் ஒரு சிலரின் தனிப்பட்டப் பகையுணர்வுக்கு இச்சிறுமி பலியாக்கப்பட்டுள்ளதை உணரமுடிகிறது என்று கூறினார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நிலவும் வன்முறைகளுக்கு எதிராக, திருத்தந்தையும், வத்திக்கான் அதிகாரிகளும் குரல் எழுப்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமி Rimsha கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauran வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தானில் மிக அதிகமாய் தற்போது தேவைப்படுவது மக்களிடையே மனம் திறந்த உரையாடலே என்றும், இத்தகைய உரையாடல்களே இவ்வன்முறைகள் பெருகாமல் காக்கும் சிறந்த வழி என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.