2012-08-30 15:36:18

தமஸ்கு நகரில் கிறிஸ்தவ இறுதி ஊர்வலத்தின்போது குண்டுவெடிப்புத் தாக்குதல் - 12 பேர் கொலை


ஆக.30,2012. சிரியாவின் தமஸ்கு நகரின் புறநகர் பகுதியில் ஆகஸ்ட் 28, இச்செவ்வாயன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட, 12 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். வேறு சில செய்திகளில் இறந்தோரின் எண்ணிக்கை 27 என்றும் சொல்லப்படுகிறது.
இத்திங்களன்று வன்முறைத் தாக்குதல்களால் கொலையுண்ட இரு கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இச்செவ்வாயன்று நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின்போது, குண்டுகள் வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனம் வெடித்ததில் இக்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த 6 இலட்சம் மக்கள் வாழும் Jaramana பகுதியில் 250,000 கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகள் உடையோரிடமிருந்து இம்மக்களுக்குத் தொடர்ந்து அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சிரியாவில் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு தருகின்றனர் என்ற தவறான வதந்திகளால் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய வன்முறையாளர்களின் இலக்காக மாறி வருவது வேதனையே என்று இலத்தீன் கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் தன் பெயரைக் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.