2012-08-29 15:40:38

திருப்பீடத்தூதர் : சிரியா நரகத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது


ஆக.29,2012. சிரியா நாட்டில் ஒவ்வொரு நாளின் விடியலும் புதிது புதிதான மரணங்களின் பட்டியலோடும், வெற்றிகளின் அறிவிப்புக்களோடும் தொடங்குகின்றது என்று அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
சிரியாவின் ஜோபர் மாவட்டத்தில் இராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைக் கொண்டாடியவண்ணம் புரட்சியாளர்கள் இச்செவ்வாய்க்கிழமையைத் தொடங்கினார்கள் என்றுரைத்த பேராயர் Zenari, இந்த வெற்றிகள் உண்மையோ அல்லது கற்பனையோ எப்படியிருப்பினும், இத்தகைய கொண்டாட்டங்கள் மற்றும் மரண அறிவிப்புக்களுடன் ஒவ்வொரு நாளும் விடிகின்றது என்று தெரிவித்தார்.
சிரியா அரசு Daraya நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அறிவிக்கின்றது, மறுபக்கம், பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 320 பேர் அரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர் எனப் புரட்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்றுரைத்த பேராயர், சிரியாவில் ஒவ்வொரு நாளும் இப்படித் தொடங்குகின்றது என்று கூறினார்.
சிரியாவில் தற்போது இடம்பெறுவது சில அரபு நாடுகளில் இடம்பெற்ற “அரபு வசந்தம்” கிளர்ச்சி போல் அல்லாமல் கற்பனைக்கு எட்டாத கடும் விளைவுகளைக் கொண்டுவரும் மிகவும் சிக்கலான பிரச்சனையாக இருக்கின்றது என்றும் எச்சரித்த திருப்பீடத் தூதர், சிரியா, நரகத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது என்றே சொல்லத் தோன்றுகின்றது என்று கவலை தெரிவித்தார்.
இதற்கிடையே, புரட்சிப்படைகளுக்கு எதிரான சண்டையில் வெற்றி பெறுவதற்கு சிரியா அரசுக்கு இன்னும் அவகாசம் தேவைப்படுகின்றது என்று சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assad இப்புதனன்று கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.