2012-08-28 15:25:05

விவிலியத் தேடல் - திருப்பாடல் 133 : பகுதி 2


RealAudioMP3 அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் லாரன்ஸ் என்ற நகரில் உள்ள Notre Dame கத்தோலிக்கப் பள்ளியில் Brian Siemann என்ற இளைஞன் புதிதாகச் சேர்ந்து, முதல் நாள் வகுப்புக்களுக்கு சென்றார். அப்பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரிடமிருந்து Brianக்கு ஓர் ஆச்சரியமான அழைப்பு வந்தது. "நமது பள்ளியின் ஓட்டப்பந்தயக் குழுவில் நீ சேரவேண்டும்" என்பதே அந்த அழைப்பு. இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று நீங்கள் சிந்திக்கலாம். Brian சாதாரண இளைஞன் அல்ல; இவர் பிறந்தபோது மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு விபத்தால், இடுப்புக்குக் கீழ் முற்றிலும் உணர்விழந்து, சக்கர நாற்காலியில் வாழ்பவர்... எனவேதான் இந்த அழைப்பு அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஆனால், அன்றிலிருந்து தன் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் ஆரம்பமானது என்று Brian கூறுகிறார்.
ஆகஸ்ட் 29, இப்புதனன்று இலண்டன் மாநகரில் ஆரம்பமாகும் மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 22 வயது நிரம்பிய Brian Siemann 100, 200, 400, 800 மீட்டர் பந்தயங்கள், மாரத்தான் ஆகிய அனைத்து சக்கர நாற்காலி ஓட்டங்களிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் சார்பாக கலந்துகொள்கிறார். இவர் கட்டாயம் சாதனைகள் படைப்பார் என்பது அமெரிக்கர்களின் கனவு. Brian பெற்றுள்ள இந்த வளர்ச்சிக்கு தன் குடும்பமும், தான் வளர்ந்த ஊர்ச் சமுதாயமும் முக்கியக் காரணமென்று இவர் கூறுகிறார். இவரது குறையை பெரிதுபடுத்தாமல், இவரது குடும்பமும், ஊர்ச் சமுதாயமும் இவரை காத்து, வளர்த்ததால் இன்று உலக அரங்கில் B சாதனைகள் புரிய வந்துள்ளார்.
"சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!" என்ற திருப்பாடல் 133ன் துவக்க வார்த்தைகளுக்கு Brian வாழ்வு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. இப்பதனன்று ஆரம்பமாகும் மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு வீரரின் பின்னணியிலும் ஒரு குடும்பம், ஒரு சமுதாயம் ஒன்றுபட்டு அவர்களை வளர்த்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்கள் என்ற தொகுப்பில் உள்ள இறுதி இரு பாடல்களில் ஒன்றான 133ல் நமது தேடலைச் சென்ற வாரம் ஆரம்பித்தோம். நம்மைச் சுற்றியுள்ள இயற்கையனைத்தும் ஒரே குரலாகச் சொல்லித்தரும் ஒற்றுமைப் பாடங்களை மனிதர்களாகிய நாம் பயில்வதற்குப் பதிலாக, நமக்குள் இருக்கும் பிரிவுகள், பிளவுகள், பகையுணர்வுகளை இயற்கையின் மீதும், முக்கியமாக, விலங்குகள் உலகின் மீதும் நாம் திணிக்க முயல்கிறோம் என்ற கோணத்தில் சென்ற வாரம் சிந்தித்தோம். ஒற்றுமையின்றி நாம் வாழ்வதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று நமது ஞாபகச் சக்தி...
இந்த ஞாபகச்சக்தியில் தேவையற்ற காயங்களை, பழையப் பகைமை உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்வதாலேயே நம்மால் ஒருங்கிணைந்து வாழமுடியாமல் துன்புறுகிறோம். நமது நினைவுகளில் பதிந்த காயங்களை வரலாறாகப் பதித்து மீண்டும் மீண்டும் இந்த வன்முறைகளைத் திருப்பிப்பார்க்கும் வழிமுறைகளையும் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்த வரலாற்றுக் காயங்கள் தலைமுறை, தலைமுறையாக நம்முடன் பயணம் செய்கின்றன.

Michael Christopher என்பவர் எழுதிய 'The Black Angel' 'கறுப்பு வானத்தூதன்' என்ற நாடகத்தில் வரும் ஒரு காட்சி இது... மனதைப் பாதிக்கும் ஒரு காட்சி.
Herman Engel என்பவர் இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானிய இராணுவத்தில் ஒரு தளபதியாகப் பணிபுரிந்தவர். இவர் இழைத்த போர் குற்றங்களுக்காக போர் முடிந்தபின் 30 ஆண்டுகள் சிறையில் இருந்தார். பின்னர் விடுவிக்கப்பட்டார். தன் விடுதலைக்குப் பின், அவர் மனித சமுதாயத்தின் கண்களிலேயே அதிகம் படவேண்டாம் என்ற தீர்மானத்துடன் ஒரு மலைப்பகுதியில் ஒரு சிறு வீட்டை அமைத்துக்கொண்டு தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். தன் வாழ்வில் முற்றிலும் ஒரு புதிய பகுதியை துவக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தார்.
Herman Engelன் சிறை வாழ்வையும், அதற்குப் பின் அவர் மலைக்குச் சென்று வாழ்வதையும் மோரியோ (Morrieaux) என்ற ஒரு பத்திரிகை நிருபர் தொடர்ந்து கவனித்து வந்தார். மோரியோவின் குடும்பத்தையும், அவர் ஊரில் இருந்த அனைவரையும் அவர்கள் ஊருக்கு வந்த ஜெர்மானிய வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அந்த வீரர்களின் தலைவராக இருந்தவர் Engel. எனவே, மோரியோவினால் Engelஐ மன்னிக்கவே முடியவில்லை. நீதி மன்றம் வேண்டுமானால், 30 ஆண்டுகள் சிறை வாழ்வுக்குப் பிறகு Engelஐ விடுவித்திருக்கலாம், ஆனால் அவர் இறக்கவேண்டும் என்ற முடிவுடன் மோரியோ அவர் தங்கியிருந்த மலைக்குச் சென்றார். அப்பகுதியில் வாழ்ந்த கிராமத்து மக்களிடம் Engel செய்த கொடுமைகளை விளக்கி, அவர் வாழும் வீட்டை அவர்கள் கொளுத்தும்படி அவர்களைத் தூண்டிவிடுகிறார். அன்றிரவு கிராமத்து மக்கள் Engel வீட்டை கொளுத்துவது என்ற தீர்மானத்துடன் இருந்தனர். மாலையில், மோரியோ தன் மனதில் இருந்த கோபத்தையெல்லாம் கொட்டிவிடவேண்டும் என்று Engel வீட்டுக்குச் செல்கிறார். அவரை அன்புடன் வீட்டுக்குள் அழைத்து Engel பேசிக்கொண்டிருக்கிறார். அவரது மனைவி மோரியோவுக்கு தேநீர் தயாரித்துக் கொடுக்கிறார்.
மோரியோ தன் ஆத்திரத்தை எல்லாம் வாய் வார்த்தைகளாகக் கொட்டிக்கொண்டிருக்கும்போது, Engel தன்னிடம் உருவாகியுள்ள மாற்றங்களை அவரிடம் அமைதியாக எடுத்துக் கூறுகிறார். மோரியோவின் மனது மாறுகிறது. அன்றிரவு கிராம மக்களும் தானும் சேர்ந்து அவரைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதைக் அவரிடம் கூறுகிறார். அதுமட்டுமல்ல, அவரையும், அவரது மனைவியையும் தான் காப்பாற்ற விழைவதாகச் சொல்கிறார்.
Engel அவர் சொன்னதைக் கவனமாகக் கேட்ட பின்னர் அவரோடு தானும் தப்பிக்க சம்மதம் என்று சொல்கிறார். ஆனால், ஒரு நிபந்தனை... மோரியோ தன்னை மன்னித்துவிட்டதாகச் சொன்னால் மட்டுமே தான் அவருடன் தப்பிக்கப்போவதாகச் சொல்கிறார் Engel.
மோரியோவுக்கு அதிர்ச்சி.... Engelஐ தப்பிக்கச் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். ஆனால், அவரை மன்னிப்பதா? அது தன்னால் முடியாது என்று தீர்மானிக்கிறார். Engelம் அவரது மனைவியும் அவருடன் தப்பித்துச் செல்ல மறுக்கின்றனர். அன்றிரவு, இருவரும் வீட்டில் இருக்கும்போது, கிராமத்து மக்கள் வந்து வீட்டைக் கொளுத்தி, இருவரும் இறந்து விடுகின்றனர்.
தன் எதிரி என்று கருதி அவரை அழிக்க வந்தவரின் உயிரைக் காக்க முன்வரும் மோரியோவால் அவரை மன்னிக்க முடியாமல் போவது வேதனையான, சங்கடமான கேள்விகளை எழுப்புகின்றது. ஆனால், மனித சமுதாயம் அன்று முதல் இன்று வரை போராடி வரும் ஒரு நிதர்சனமான உண்மையும் இதுதான்.

இந்நிகழ்வுக்கு முற்றிலும் நேர்மாறாக, இரண்டாம் உலகப்போரின்போது உருவாக்கப்பட்ட நாத்சி வதை முகாம்களில் மக்கள் மனதில் பொங்கியெழுந்த மன்னிப்பு மனித குலத்தின் மீது நமது நம்பிக்கையை வளர்க்கிறது. இரண்டாம் உலகப் போரில் நாத்சி வதை முகாம்களுக்குப் பிறகு நடந்த மனதை உருக்கும் மன்னிப்பு நிகழ்ச்சிகள் பல ஆயிரம். நாத்சி வதை முகாம் ஒன்றில் சுவற்றில் காணப்பட்ட வரிகள் இவை. அங்கு சித்ரவதைகளை அனுபவித்த ஒரு கைதி இதை எழுதியிருக்க வேண்டும். நல்ல மனதுள்ளவர்களை நினைவு கூர்ந்தருளும். அவர்களை மட்டுமல்ல, தீமை செய்வோரையும் நினைவு கூர்ந்தருளும். அவர்கள் எங்களுக்கு இழைத்தக் கொடுமைகளை மட்டும் நினையாதேயும். அந்தக் கொடுமைகளால் விளைந்த பயன்களையும் நினைவு கூர்ந்தருளும். இந்தக் கொடுமைகளால் எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, ஒருவரை ஒருவர் தேற்றிய மனப்பாங்கு, எங்கள் அஞ்சா நெஞ்சம், நாங்கள் காட்டிய தாராள குணம்... இவைகளையும் நினைவு கூர்ந்தருளும். நாங்களும், அவர்களும் இறுதித் தீர்வைக்கு வரும்போது, அவர்கள் விளைத்த தீமைகளால் எங்களுக்கு ஏற்பட்ட நன்மைகளைக் கண்ணோக்கி, அவர்கள் தீமைகளை மன்னித்து, அவர்களுக்கு நல் வாழ்வைத் தந்தருளும்.

2008 ஆம் ஆண்டு Laura Walters Hinson என்ற அமெரிக்க இளம் பெண் ஆப்ரிக்காவின் Rwanda வைப் பற்றிய ஓர் ஆவணப் படம் எடுத்தார். அந்தப் படத்தின் தலைப்பு: ‘As We Forgive…’ ‘நாங்கள் மன்னிப்பதுபோல்…’ இந்தப் படத்தின் ஆரம்பத்தில் திரையில் தோன்றும் வரிகள் இவை: "சிறையில் இருக்கும் ஒரு கொலைகாரனை நீங்கள் வாழும் பகுதியில் விடுதலை செய்யப்போகிறார்கள் என்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? நாளை இந்த அரசு ஒருவரை அல்ல, 40,000 கொலையாளிகளை விடுதலை செய்கிறார்கள். இவர்கள் நாம் வாழும் பகுதியில் வாழ வருகிறார்கள்." என்ற அவ்வரிகள் இந்த ஆவணப்படத்தின் மையப் பிரச்சனையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. Rwandaவில் Tutsi இனத்தைச் சேர்ந்தவர்களில் 8 இலட்சம் பேருக்கு மேல் 1994ம் ஆண்டில் கொல்லப்பட்டனர் இவர்களில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். இந்தக் கொலைகளைச் செய்ததாக ஒத்துக்கொண்ட 70,000 பேருக்கும் மேற்பட்ட Hutu இனத்தவர் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு இவர்களை அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த Tutsi மக்கள் மத்தியில் இக்கொலையாளிகள் மீண்டும் வாழ வந்தனர். இக்கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கும் இடையே நடந்த அந்த ஒப்புரவை இந்த ஆவணப் படம் காட்டுகிறது.

மனதைச் சங்கடப்படுத்தும் பல காட்சிகள் இந்த படத்தில் உள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவேமுடியாது என்று ஆரம்பத்தில் கூறும் Tutsi மக்கள் முடிவில் அவர்களை மன்னிக்கும் காட்சிகள் உள்ளத்தை அதிகம் பாதிக்கின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதேபோல், அந்தக் கொலையாளிகளும் கண்ணீருடன் மன்னிப்பு வேண்டுவது மனதைத் தொடும் காட்சிகள். இந்த ஆவணப் படம் பல திரைப்பட விழாக்களில் பரிசுகள் பெற்றுள்ளன. இந்த படத்தின் செய்திகளை மையமாக வைத்து 2009ம் ஆண்டு இதே தலைப்புடன் ஒரு புத்தகம் வெளியாகி உள்ளது. Catherine Larson எழுதிய இந்தப் புத்தகம் பல்லாயிரம் மனங்களில் மன்னிப்பை வழங்கியுள்ளது, மன்னிப்பை வழங்கத் தூண்டியுள்ளது.

இந்த ஆவணப் படத்தில் ஒருவரின் கூற்றை மட்டும் இங்கு கூற விழைகிறேன். மன்னிப்பு மட்டுமே மனிதகுலத்தைக் காக்க முடியும் என்பதை இவரது கூற்று வலியுறுத்துகிறது: "இந்த மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவைகளிலேயே இருந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்துவிடும். ஒரு உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்படி அந்த கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து விடுகிறதோ, அதேபோல் இவர்களது இந்தக் கசப்பான எண்ணங்கள், நினைவுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்ற முடியும்."

மனிதகுலம் ஒன்றுபட்டு வாழ்வதால் உருவாகும் நன்மைகளை விளக்க, திருப்பாடல் ஆசிரியர் இரு அழகான ஒப்புமைகளைக் கூறியுள்ளார்.
திருப்பாடல் 133
சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது! அது ஆரோனின் தலையினிலே ஊற்றப்பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவருடைய அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும். அது எர்மோனின் மலைப்பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதற்கு ஒப்பாகும்.

நறுமணத் தைலம் என்ற ஒப்புமை இறைவனையும், விண்ணகத்தையும் சார்ந்த புனித எண்ணங்களையும், 'மலைப்பனி' என்ற ஒப்புமை உலகம் சார்ந்த நடைமுறை எண்ணங்களையும் உள்ளத்தில் தூண்டும் வலிமை பெற்றவையாக உள்ளன. இந்த ஒப்புமைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் அடுத்தத் தேடலில் தொடரும்.








All the contents on this site are copyrighted ©.