2012-08-28 15:02:04

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையுடன் முழு ஒப்புரவு ஏற்படுத்துவதற்குப் போலந்து ஆயர்கள் தீவிரம்


ஆக.28,2012. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையுடன் முழு ஒப்புரவு ஏற்படுத்தும் நோக்கத்தில் பெரியதொரு திட்டம் வகுத்து வருகின்றனர் போலந்து கத்தோலிக்க ஆயர்கள்.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், போலந்து தலத்திருஅவைக்கும் இடையே ஒப்புரவு ஏற்படுவது குறித்து அவ்விரு திருஅவைத் தலைவர்கள் இணைந்து இம்மாதத்தில் கையெழுத்திட்ட முழு அறிக்கையும் போலந்தின் அனைத்துப் பங்குகளிலும் திருப்பலியின்போது வாசிக்கப்பட வேண்டுமென போலந்து ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போலந்தின் பாதுகாவலியாகிய Czestochowa அன்னைமரி விழாவை இவ்வார இறுதியில் சிறப்பிக்கும்போது, இந்தத் தங்களது ஆவலை அன்னைமரியிடம் அர்ப்பணிக்கவும் ஆயர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் முதலாம் Kirillம், போலந்து கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Józef Michalikம் இம்மாதம் 17ம் தேதி Warsawவில் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்புரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இரஷ்யாவுக்கும் போலந்துக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ள பகைமை உணர்வுகளால் விளைந்துள்ள காயங்களைக் குணமாக்கவும், ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒப்புரவில் வளரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.