2012-08-27 16:06:26

திருத்தந்தை : நேர்மையின்மை தீயவனின் அடையாளம்


ஆக.27,2012. யூதாஸ் இஸ்காரியோத் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதை நிறுத்திய பின்னரும் அவரைத் தொடர்ந்து பின்செல்வதற்கு எடுத்த தீர்மானத்தில் வெளிப்படுவது போன்று, நேர்மை குறைவுபடுவது “தீயவனின் அடையாளமாக” இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

காஸ்தெல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்ல வளாகத்திலிருந்து வழங்கிய இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்துப் பேசிய போது, இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோத்தின் போலித்தனம் பற்றி விளக்கினார் திருத்தந்தை.

இயேசு கப்பர்நாகுமிலுள்ள தொழுகைக்கூடத்தில், விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்று தன்னை அறிவித்த போது, இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம் என்று சொல்லி அவரைப் பின்சென்றவர்களில் பலர் அவரை விட்டு விலகினர், அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. அப்போது இயேசு பன்னிரு சீடரிடம், நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார். அதற்கு புனித பேதுரு, ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன என பன்னிருவர் சார்பாகச் சொன்னார் என நற்செய்தியாளர் யோவான் எழுதியிருக்கிறார்.

இப்பகுதியை விவரித்த திருத்தந்தை, இதில் யூதாஸ் இஸ்காரியோத் விதிவிலக்காக இருந்தார், யூதாஸ் நேர்மையாளராய் இருந்திருந்தால் இவரும் இயேசுவை விட்டு விலகிச் சென்றிருக்க வேண்டும், ஆனால் அவர் இயேசுவோடு இருக்கவே முடிவு செய்தார், இது, யூதாஸ் இயேசு மீது கொண்டிருந்த பற்றுறுதியாலோ அல்லது அன்பாலோ அல்ல, மாறாக, தனது போதகர் மீதி பழிவாங்கும் இரகசிய ஆசையாலே இயேசுவோடு இருந்தார் என்றார்.

ஏனெனில் யூதாஸ், தான் இயேசுவால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார், அதற்காக அவரை மறுதலிக்கத் தீர்மானித்தார், யூதாஸ் உரோமை ஆதிக்கத்தை வெறுத்த ஒரு தீவிரவாத யூதர், உரோமையருக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டக்கூடிய வெற்றிகளைக் கொண்டு வரும் மெசியாவை அவர் விரும்பினார், ஆனால் யூதாஸ் தனது அந்த எதிர்பார்ப்புகளால் ஏமாற்றமடைந்தார் என்று விளக்கினார் திருத்தந்தை.

புனித பேதுரு செய்தது போல நாமும் இயேசுவில் பற்றுறுதி கொள்ளவும், அவரோடும் அனைத்து மக்களோடும் எப்போதும் நேர்மையாய் வாழவும் அன்னைமரியின் உதவியை நாடுவோம் என்றும் திருத்தந்தை கூறினார்.

இயேசுவின் போதனைகள்மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் சோதிக்கப்பட்டாலும் நாம் என்றும் ஆண்டவருக்குப் பிரமாணிக்கமாக வாழ்வோம் என்றும் மூவேளை செப உரையில் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.