2012-08-24 17:18:29

பேராயர் தொமாசி : சில கருத்துருவாக்கங்கள் சமய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன


ஆக.24,2012. மதங்களுக்கு இடையே நிலவும் வேறுபாடுகள், கலவரங்களுக்கு இட்டுச் செல்லாமல், உரையாடலை மேலும் அதிகமாக ஊக்கப்படுத்த வழிநடத்த வேண்டும் என்பது பரவலாக உணர்த்தப்பட வேண்டும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்தாலியின் ரிமினியில் “ஒன்றிப்பும் விடுதலையும்” என்ற பொதுநிலையினர் அமைப்பு நடத்திவரும் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு தெரிவித்தார்.
மதங்களுக்கு இடையே சகிப்பற்றதன்மை வளர்ந்து வருவது வன்முறையை அல்லது சண்டையை மட்டும் தூண்டிவிடவில்லை, ஆனால், மத நம்பிக்கை கொண்டவர்கள் பொதுநலவாழ்வில் பங்கு கொண்டு பொதுநலனுக்குச் செய்ய முயற்சிக்கும் நற்செயல்களுக்கு இடையூறாகவும் இருக்கின்றது என்றும் பேராயர் தொமாசி கூறினார்.
மதம், குறிப்பாக கிறிஸ்தவம் தனிப்பட்டவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றது என்று சில ஊடகங்கள் விவரிக்கின்றன, ஆனால் இதனை நாம் வேறு விதமாக நோக்க வேண்டும் என்றுரைத்த பேராயர், சில கருத்துருவாக்கங்கள் சமயத்தை சுதந்திரமாகச் செயல்படுத்துவதைக் கட்டுப்படுத்துகின்றன என்று கூறினார்.
இச்சனிக்கிழமையன்று நிறைவடையும் இக்கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, அரசியல், மதம், பொருளாதாரம், கலாச்சாரம் எனப் பல துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தலைவர்கள் உட்பட எட்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.