2012-08-24 17:16:23

திருப்பீடத் தூதர்:அயர்லாந்து நாடு “உண்மையான கத்தோலிக்க” மறுமலர்ச்சியின் மூலம் துன்பங்களை மேற்கொள்ள முடியும்


ஆக.24,2012. 19ம் நூற்றாண்டில் Knock அன்னைமரியா காட்சி கொடுத்ததற்குப் பின் அயர்லாந்தில் இடம்பெற்ற கிறிஸ்தவ மறுமலர்ச்சியைப் போன்று, தற்போதைய நவீன அயர்லாந்திலும் ஓர் “உண்மையான கத்தோலிக்க” மறுமலர்ச்சி இடம்பெற வேண்டுமென்று அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Charles Brown கேட்டுக் கொண்டார்.
அயர்லாந்தின் Mayo மாவட்டத்திலுள்ள Knock அன்னைமரியா திருத்தலத்தில் நடைபெற்ற தேசிய பொது நவநாள் பக்திமுயற்சியின் இறுதியில் மறையுரையாற்றிய பேராயர் Brown, பல ஆண்டுகள் துன்பங்களை எதிர்நோக்கியுள்ள அயர்லாந்தின் எதிர்காலம் இப்போது துவங்குகிறது என்று கூறினார்.
1879ம் ஆண்டில் அன்னைமரியா, Knock என்ற இந்த இடத்தில் காட்சி கொடுத்தபோது இந்நாட்டுக் கத்தோலிக்கர் செல்ல வேண்டியிருந்த பாதை எளிதானதாக இல்லையெனக் கூறிய பேராயர் Brown, இருந்தபோதிலும் அயர்லாந்து கத்தோலிக்கத்தின் 15 நூற்றாண்டுகால வரலாற்றில் இக்காட்சிக்குப் பின்னான காலம் மிகவும் பயனுள்ள காலமாக இருந்ததெனவும் பேராயர் குறிப்பிட்டார்.
1879ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி Knock ஆலயத்தில், அன்னைமரியா, புனித வளன், நற்செய்தியாளர் புனித யோவான் ஆகிய மூவரும் காட்சி கொடுத்ததை 15 பேர் பார்த்தனர். இவர்கள், கொட்டும் மழையிலும், இந்தக் காட்சியைப் பார்த்தவண்ணம் இரண்டு மணிநேரங்கள் அமைதியாகச் செபித்துக் கொண்டிருந்தனர் என வரலாறு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.