2012-08-24 17:09:11

தக்கலை சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர், பாளை மறைமாவட்டத்திற்குத் துணை ஆயர்


ஆக.24,2012. இந்தியாவின் தக்கலை சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்திற்கு, அந்த ரீதியின் மாமன்றம் தேர்ந்தெடுத்துள்ள புதிய ஆயரையும் பாளை மறைமாவட்டத்தின் துணை ஆயரையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கேரளாவின் Saint Thomas Mountல் கூடிய சீரோ-மலபார் ரீதி மாமன்றம், தக்கலை சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, சலேசிய சபை அருள்தந்தை George Rajendran Kuttinadar அவர்களையும், கேரளாவின் பாளை மறைமாவட்டத்தின் துணை ஆயராக அருட்பணி Jacob Muricken அவர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்தின் புதிய ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருள்தந்தை George Rajendran Kuttinadar, ஷில்லாங் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகவும், துணை ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருட்பணி Jacob Muricken, Palai சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணி மைய இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்கள்.
தக்கலை சீரோ-மலபார் ரீதி மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வந்த Mar George Alencherry அவர்கள், சீரோ-மலபார் ரீதி திருஅவையின் தலைவராகவும், எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் 2011ம் ஆண்டு மே 24ம் தேதி நியமனம் செய்யப்பட்டதையடுத்து அம்மறைமாவட்டத்திற்கு இவ்வெள்ளியன்று புதிய ஆயரும், பாளை மறைமாவட்டத்தின் துணை ஆயரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கீழைரீதி திருஅவை சட்டத்தின்படி, கத்தோலிக்கத் திருஅவையில் இருக்கின்ற 21 தன்னாட்சி அதிகாரம் கொண்ட சிரிய ரீதி சபைகள், அச்சபைகளின் மாமன்றங்கள் தேர்ந்தெடுக்கும் ஆயர்களைத் திருத்தந்தை அங்கீகரிக்கிறார்.







All the contents on this site are copyrighted ©.