2012-08-24 17:21:42

Rimsha Masihன் விடுதலைக்கு பாகிஸ்தான் சமயத் தலைவர்கள் உழைத்து வருகின்றனர்


ஆக.24,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் சிறையில் வைக்கப்பட்டுள்ள Rimsha Masih என்ற 11 வயது சிறுமியின் விடுதலைக்கும், இவ்விவகாரத்தை வைத்து முஸ்லீம்-கிறிஸ்தவ வன்முறை ஏற்படாமலிருக்கவும் அந்நாட்டு சமயத் தலைவர்களும் நிறுவனங்களும் உழைத்து வருகின்றன என்று அந்நாட்டு கத்தோலிக்க அரசியல் தலைவர் Paul Bhatti கூறினார்.
இவ்வியாழனன்று ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமரின் தேசிய நல்லிணக்க ஆலோசகர் Paul Bhatti, முஸ்லீம் தலைவர்கள் உட்பட பலர் இச்சிறுமியின் விடுதலைக்காக உழைத்து வருகின்றனர் என்று கூறினார்.
Down's syndrome என்ற மனநிலைக் குறைவுள்ள சிறுமி Rimsha, அரேபிய மொழியையும், குரானையும் சொல்லித்தர உதவும் ஒரு நூலின் சில பக்கங்களை எரித்தார் என்று குற்றச்சாட்டப்பட்டு இம்மாதம் 18ம் தேதி சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, இச்சிறுமியிடம் கேட்கப்படும் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல் இருக்கிறாள் என்றும், குரானைக் கற்றுக்கொள்ள உதவும் ஒரு நூலின் எரிக்கப்பட்ட பக்கங்கள் கொண்ட ஒரு பையுடன் அவளைக் கண்டுபிடித்திருக்கின்றனர் என்றும், இந்தப் பையை அவளிடம் யார் கொடுத்தது, அல்லது இதனை அவள் எங்கிருந்து எடுத்தாள் என்பதும் தெரியவில்லை என பாகிஸ்தானில் பணியாற்றும் புனித பால் துறவு சபை அருள்சகோதரி Daniela Baronchelli தெரிவித்தார்.
சிறுமி Rimsha மீது சாட்டப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபணமானால், அச்சிறுமிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.