2012-08-21 16:06:52

விவிலியத் தேடல் - திருப்பாடல் 133


RealAudioMP3 நாரைகள் வானில் கூட்டமாய்ப் பறந்து செல்வதை நாம் பார்த்திருப்போம். அவை கூட்டமாய்ப் பறக்கின்றன என்று சொல்வதற்குப் பதில், ஓர் அணிவகுப்பாய் பறக்கின்றன என்றே சொல்லவேண்டும். அவ்வளவு அழகான ஒரு வடிவத்தில் அவை பறந்துசெல்லும்.
ஆங்கில எழுத்துக்களில் V என்ற எழுத்து தலைகீழாகச் செல்வதுபோல்... அம்பு ஒன்று வானைக் கிழித்துக்கொண்டு செல்வதுபோல்... நாரைகளின் அணிவகுப்பு அமைந்திருக்கும். அணியின் தலைமையில் ஒரு பறவை செல்லும், அதன் சிறகுகளைத் தொட்டும் தொடாமலும் இரு பறவைகள் பறக்கும், அவ்விரு பறவைகளின் வெளி சிறகுகளை ஒட்டி அடுத்த இரு பறவைகள்... இப்படி, குறைந்தது 15 அல்லது 20 பறவைகள் அணிவகுத்துச் செல்லும். இத்தகைய ஒரு வடிவில் பறந்து செல்வதாலேயே அவை பல நூறு மைல்கள் தூரத்தை எளிதாகக் கடக்கமுடிகிறது என்று சொல்கிறார்கள் பறவை நிபுணர்கள்.
நாரைகள் இவ்வாறு பறந்துச்செல்லும் பாணி, பல கல்லூரிகளிலும், மேலாண்மைப் பள்ளிகளிலும், பெரும் தொழில் நிறுவனங்களிலும் பாடங்களாகச் சொல்லித் தரப்படுகின்றது. குழுவாகச் செயல்படும்போது என்னென்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பதை அணிவகுப்பாய்ப் பறக்கும் நாரைகள் நமக்குச் சொல்லித் தருகின்றன.

நாரைகளின் அணிவகுப்பை நாம் இன்று எண்ணிப் பார்க்கத் தூண்டியது திருப்பாடல் 133ன் ஆரம்ப வார்த்தைகள். "சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!" திருப்பாடல் ஆசிரியர் தான் காணும் ஒரு காட்சியாக இந்த வார்த்தைகளைச் சொல்கிறாரா அல்லது இப்படி இருந்தால் நலமாக இருக்குமே என்ற தன் ஏக்கத்தை இந்த வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறாரா என்பதில் தெளிவில்லை. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு... ஏனைய உயிரினங்களோடு, இயற்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனிதர்கள் மத்தியில் மட்டுமே ஒன்றுபட்டு வாழ்வது கடினமாக உள்ளது என்பது தெளிவான ஓர் உண்மை. ஏனைய உயிரினங்கள் நமக்குச் சொல்லித் தரும் பாடங்களைப் பயின்றால் பயன் பெற முடியுமே! நாரைகள் நமக்குச் சொல்லித் தரும் பாடங்களிலிருந்து ஆரம்பிப்போம்:

நாரைகள் ஏன் சிறகோடு சிறகு உரசும்வகையில் பறக்கின்றன? அவ்விதம் பறக்கும்போது, முன்னிருக்கும் பறவை தன சிறகுகளால் உருவாக்கும் காற்றழுத்தம் அடுத்தப் பறவையை வானில் மிதக்கவைக்கும்; அதிக முயற்சியின்றி அந்தப் பறவையால் பறக்கமுடியும். தனியே ஒரு நாரை பறக்கும்போது செலவிடும் சக்தியில் பாதி சக்தியே இந்த அணிவகுப்பில் ஒவ்வொரு நாரையும் செலவிடுகிறது. நாமும் குழுவாக இயங்கும்போது ஒருவரது சக்தியை மற்றவர் பயன்படுத்தினால் உடலும் மனதும் தளராமல் நம்மால் பணி செய்யமுடியும், பெருமளவு சாதிக்கவும் முடியும்.
அணிவகுப்பின் தலைமை இடத்தில் பறக்கும் பறவை கூடுதலாகத் தன் சக்தியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே, அது சோர்வடையும் வாய்ப்பு உண்டு. அப்படி சோர்வடையும்போது, அது அந்த இடத்தைவிட்டு விலகி அணிவகுப்பின் இறுதியில் சென்று சேர்ந்துகொள்ளும். சோர்வடைந்த பறவை வீம்புக்காக தலைமை இடத்திலேயே தங்கி மற்ற பறவைகள் பறக்கும் வேகத்தைக் குறைப்பதில்லை. சோர்வுற்ற பறவை விலகியதும், அதற்கு அடுத்துள்ள பறவை அந்த இடத்தை நிறைக்கும். இதனால் குழுவின் முன்னேற்றத்திற்குத் தடையேதும் இன்றி பயணம் தொடரும். இந்தப் பெருந்தன்மையை நாம் மனிதக் குழுக்களில் காண்பது அரிது!
இந்த அணிவகுப்பின் இறுதி இடங்களில் பறக்கும் பறவைகள் குரல் எழுப்பி, முன் செல்லும் பறவைகளை உற்சாகப்படுத்தும். தாங்கள் குழுவின் கடைசி இடத்தில் இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை, பொறாமை இந்தப் பறவைகளைப் பாதிப்பதில்லை. தங்களுக்கு முன் பறக்கும் பறவைகளின் அழகை அவை இரசித்து குரல் எழுப்புவதுபோல் இருக்கும். மனிதக் குழுக்களிலும் இறுதி நிலையில் உள்ளவர்கள் குரல் எழுப்புகின்றனர். எதற்காக? நடப்பது சரியில்லை என்பதை ஊரறிய, உலகறியச் சொல்வதற்கும், தங்களுக்கு முன் இருப்பவர்களின் குறைகளைப் பறைசாற்றுவதற்குமே நாம் குரல் எழுப்புகிறோம்.

நாரைகளின் அணிவகுப்பைக் கண்டு பாடங்களைப் பயில்வதற்குப் பதிலாக, இவ்வணிவகுப்பைக் கண்டதும் பாதகங்களைச் செய்யத்துணியும் மனிதர்களும் உண்டு. அந்த நாரைகளை வேட்டையாடும் மனிதர்களைத்தான் சொல்கிறேன்.
வேட்டையாடும் மனிதர்களின் மடைமைக்கு ஏதாவது ஒரு பறவை இலக்காகி, கீழே விழுந்தால், அப்பறவையுடன் வேறு இரு பறவைகளும் தரையிறங்கும். காயப்பட்ட அந்தப் பறவையால் மீண்டும் பறக்க முடியும்வரை அவை அந்தப் பறவையுடன் காத்திருக்கும். பெரும்பாலான நேரங்களில், கீழே விழுந்த பறவை உயிர்வாழ்வது அரிது. அப்போது, அடிபட்டப் பறவை இறக்கும்வரையில் அந்த இரு பறவைகளும் அதனுடன் தங்கியிருக்கும். மனிதர்கள் செய்யும் மடைமையானச் செயல்களால் உயிரை இழக்கும் நேரங்களிலும் நாரைகள் நமக்குப் பாடங்கள் சொல்லித்தருவதை நிறுத்துவதில்லை.

நாரைகளின் அணிவகுப்பு மட்டுமல்ல, விண்வெளியில் பயணிக்கும் கோடான கோடி விண்மீன்கள், சூரியக் குடும்பங்கள் என்று துவங்கி, சிறு, சிறு உயிர்களுக்குள்ளும் மோதல்கள் இன்றி பயணிக்கும் கோடான கோடி அணுக்கூட்டங்கள் வரை இயற்கையின் எல்லா இயக்கங்களுமே ஒருங்கிணைந்து, ஒன்றுபட்டு வாழும் பாடங்களை நமக்குச் சொல்லித்தந்த வண்ணம் உள்ளன. இவ்வழகியப் பாடங்களைப் பயின்றால், நாம் எவ்வளவோ முன்னேறமுடியும். இந்தப் பாடங்களை நமக்கு மீண்டும் நினைவுறுத்த ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருவது திருப்பாடல் 133.
நான்கு மாதங்களுக்கு முன் திருப்பாடல் 120ல் நாம் சீயோன் மலைத் திருப்பயணத்தை ஆரம்பித்தோம். பாடல்களைப் பாடிக்கொண்டு எருசலேம் கோவில் நோக்கிச் செல்லும் இத்திருப்பயணத்தை கடந்த 16 வாரங்களாய் மேற்கொண்டு, தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளோம். இத்திருப்பயணப் பாடல்களில் 133, 134 என்ற இவ்விரு இறுதித் திருப்பாடல்களும் ஆசீர் அளிக்கும் சொற்களால், அழகிய உருவகங்களால் நிறைந்துள்ளன. மனித குடும்பத்திற்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரும் ஆசீரான ஒற்றுமையான வாழ்வைப்பற்றி திருப்பாடல் 133 அழகான உருவகங்களுடன் விளக்குகிறது.

இயற்கை நமக்குச் சொல்லித்தரும் ஒற்றுமைப் பாடங்களைப் பயில்வதற்குப் பதில், நமது சுயநலனுக்காக, நமது குதர்க்கமான கேளிக்கைகளுக்காக இயற்கையை, அதில் வாழும் உயிரினங்களை நாம் சீரழித்து வருகிறோம். அவைகளை நமது பாணிக்கு மாற்றி வருகிறோம்.
மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமும் ஒற்றுமை குலைந்து வாழ்வதில்லை. எந்த ஓர் உயிரினத்திற்கும் போட்டி, பொறாமை, கோபம் என்ற உணர்வுகள் எழுவதில்லை. விலங்குகளிடையே சண்டைகள் எழுகின்றனவே என்ற கேள்வி எழலாம். அவை சண்டைகள் அல்ல, யார் பெரியவன் என்ற போட்டிக்காக விலங்குகள் சண்டையிடுவதில்லை. அவைகளிடையே உருவாகும் மோதல்கள் எல்லாமே அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற எழும் மோதல்களே. பசியினால் ஒரு விலங்கு மற்றொரு விலங்கை விரட்டியடித்து கொன்று, தன் பசியாறும். தன் சந்ததியைக் காப்பாற்ற ஒரு விலங்கு மற்றொரு விலங்குடன் மோதும். ஆனால், எக்காரணம் கொண்டும் அவை கோபத்தினால், பொறாமையால் செயல்படுவதில்லை.

அண்மையில் ஓர் அழகான வீடியோ குறும்படம் மின்னஞ்சல்கள் மூலம் வலம் வந்தது. இரு சிறுத்தைகளும் ஒரு மானும் இப்படத்தின் நாயகர்கள். இருசிறுத்தைகள், ஒரு மான் என்றதும் நம்மில் பலர் இந்தக் கதையின் முடிவை ஏற்கனவே எழுதி முடித்திருப்போம். பாவம், அந்த மான். இரு சிறுத்தைகளும் அந்த மானை அடித்துக்கொன்று சாப்பிட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்திருப்போம். ஆனால், அக்காட்சியில் நான் பார்த்தது நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தும். அவ்விரு சிறுத்தைகளும், மானும் பாசமாக, அழகாக விளையாடிக் கொண்டிருந்தன. அந்த அற்புத காட்சிக்குப் பின் திரையில் தோன்றிய வரிகள் இவை: "மிருகங்களுக்குப் பசியில்லாதபோது, வன்முறையும் இல்லை. மனிதர்கள் மட்டும் ஏன் காரணம் ஏதுமின்றி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்?" என்ற கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிவுற்றது.

பகுத்தறியும் திறனுள்ள மனிதர்களாகிய நாம் மட்டுமே, அறிவற்ற அக்கிரமங்களில், வன்முறைகளில் ஈடுபடுகிறோம். அதுமட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளும் நம்மைப்போல் நடந்து கொள்வதாகக் கற்பனை செய்துகொள்கிறோம், அல்லது விலங்குகளை நம்மைப்போல் மாற்ற முயல்கிறோம். தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக விலங்குகள் மோதும்போது, அங்கு உருவாகும் சப்தங்கள், முகபாவங்கள் ஆகியவற்றை நாம்தான் கோபம் என்று அர்த்தம் சொல்கிறோம். விலங்குகளை வைத்து நாம் குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளில், விலங்குகளுக்கு மனித உணர்வுகளைத் தந்து, அவைகள் மத்தியில் அகங்காரம், பொறாமை, தந்திரம், சுயநலம் என்ற உணர்வுகள் இருப்பதைப்போல் நாம் கதைகளைத் திரிக்கிறோம். விலங்குகளுக்கும், குழந்தைகளுக்கும் நாம் இழைக்கும் அநீதி இது.

இது மட்டுமல்ல. போட்டி, பொறாமை, யார் பெரியவன் என்ற எண்ணங்களும் உணர்வுகளும் இல்லாமல் வாழும் விலங்குகளை, பறவைகளை போட்டிகள் என்ற பெயரில் நாம் பழக்கப்படுத்தும் அவலமும் இவ்வுலகில் நிகழ்கிறது. சேவல்களின் கால்களில் கத்தியைக் கட்டி அவை ஒன்றை ஒன்று வெட்டிக் கொல்வதைக் கண்டு கைதட்டி இரசிக்கும் மனிதர்களையும், காளைகளின் கொம்புகளைச் சீவி அவற்றை மனிதர்களோடு மோதவிட்டு, அதனை ஒரு வீர விளையாட்டு என்றும் சொல்லி பெருமைப்படும் மனிதர்களையும் எண்ணி நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்படவேண்டும். நமது போட்டிகளுக்கும், மோதல்களுக்கும் சாதகமாக, நாம் சாதி, இனம், மதம், மொழி என்று எத்தனை பிரிவுகளை உருவாக்கியிருக்கிறோம்!

ஒருங்கிணைந்து வாழும் இயற்கையிலிருந்து பாடங்களைப் பயிலாமல், அந்த இயற்கை மீதும், பிற உயிரினங்கள் மீதும் பாடங்களைத் திணிக்கும் மனித குலம் ஒன்றி வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது... இந்த நன்மையை, இனிமையை விளக்கும் திருப்பாடல் 133ல் நமது தேடல் தொடரும்.








All the contents on this site are copyrighted ©.