2012-08-21 09:25:27

வாரம் ஓர் அலசல் – உனக்கு அடுத்திருப்பவரைத் தெரியுமா?


ஆக.20,2012. RealAudioMP3 மனித வாழ்க்கை ஓர் அசையும் ஓவியம். ஓர் உயிருள்ள ஓவியம். இந்த அழகிய வாழ்க்கையை இரசித்து அனுபவித்து வாழ்வதற்கே எல்லாரும் விரும்புகின்றனர். ஆனால் அவ்வாறு வாழ்வதற்கு இன்று பலருக்கு இயலவில்லை. செவ்வாய்க் கோளத்தில் “Curiosity” விண்கலத்தை இறக்கி அது அனுப்பிக் கொண்டிருக்கும் பல வண்ணப் படங்களை ஆய்வு செய்துவரும் அமெரிக்க அறிவியலாளர்கள், 2030ம் ஆண்டுக்குள் மனிதரை அங்கு அனுப்பவும் முயற்சித்து வருகின்றனர். இத்தகைய அறிவியல் உலகத்தில் இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை இது. ''அட, அதை ஏங்க கேக்கறீங்க? ஞாயித்துக்கிழமைகூட எதுனாச்சும் வேலை வந்துடுது, ஒருநாள்கூட ஓய்வுங்கறதே இல்லை.. அக்கடான்னு இருக்கலாம்னா, அதுக்கு ஓர் அரைநாள்கூடக் கிடைக்க மாட்டேங்குது'' எனத் தவிப்புடன் ஏக்கத்தையும் சேர்த்து புலம்புகிறவர்களும் இருக்கிறார்கள். ஒரே நாளில் மும்பையிலிருந்து சென்னை வந்து அலுவலகக் கூட்டத்தை முடித்துக் கொண்டு கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் எனப் பயணம் செய்து இரவோடு இரவாக மும்பை திரும்பி மறுநாள் அலுவலகம் செல்லும் அன்பர்களும் இருக்கிறார்கள். இந்த மாதிரி வாழ்க்கையில் அடுத்தவரைப் பற்றி, அண்டை வீட்டில் வாழ்பவரைப் பற்றி, சாலையோரத்தில் கவனிப்பாரற்றுக் கிடப்பவர் பற்றிக் கவலைப்பட நேரமேது? ஒருசமயம் ஒரு நண்பர் சாலை விபத்தில் இறந்த தனது சகோதரர் குறித்துக் கவலையோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
எனது அண்ணனுக்குச் சரியான நேரத்தில் யாரும் உதவி செய்திருந்தால் அவர் இறந்திருக்கமாட்டார். அன்று வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஒரு வாகனம் அடித்துப் போட்டுவிட்டுச் சிட்டாய்ப் பறந்து விட்டது. எனது அண்ணன் சாலையில் மயங்கிக் கிடந்திருக்கிறார். அவ்வழியேச் சென்ற பலர், ஏதோ குடிபோதையில் சுயநினைவிழந்து கிடக்கிறார் என ஒதுங்கிச் சென்றுவிட்டார்கள். ஆனால் அவ்வழியே சென்ற ஓர் உதவும் உள்ளம் தனது பைக்கை நிறுத்திவிட்டு எனது அண்ணனின் நிலையைப் பார்த்து அவசர மருத்துவ வாகனத்தை வரச்சொல்லி அதில் ஏற்றிச் சென்றிருக்கிறார். ஆனால் வாகனத்தில் செல்லும்போதே எனது அண்ணன் இறந்து விட்டார்.
காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நின்று நிதானித்து அடுத்தவர் பற்றி நினைப்பதற்கு நேரமேது? இப்படி எழுதிக் கொண்டிருக்கும்போது இஞ்ஞாயிறன்று வெளியான ஒரு செய்தி மனதுக்கு ஆறுதலாக இருந்தது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் போது, பாதிக்கப்படுவோருக்கு சரியான நேரத்திற்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாததற்காக, மத்திய அரசுக்கும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் இச்சனிக்கிழமையன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மனிதநேயம் கொண்ட பொதுநல அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த பின்னரே, தேசிய நெடுஞ்சாலைகளில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. என்னதான் அவசர அவசரமாக வாழ்க்கையை ஓட்டினாலும், மனிதம் நிறைந்த, மனிதாபிமானமிக்க உள்ளங்கள் இருப்பதால்தான் உலகம் தொடர்ந்து உயிர்பெற்று வருகிறது. சிரியா நாட்டில் ஒவ்வொரு நாளும் எத்தனை அப்பாவிகளின் உயிர்களைக் குண்டுகள் குடித்து விடுகின்றன. தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்வதற்காக எத்தனைபேர் தினமும் புலம் பெயர்கின்றனர். இதோ, நீலா என்பவரின் மனிதாபிமானம் பற்றி இஞ்ஞாயிறன்று தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. “இதுவும் சேவைதான்!” என்று தான் செய்துவரும் சேவையை ஒரு தமிழ்த் தினத்தாளிடம் விளக்கியிருக்கிறார் நீலா.
திருச்சியில் பள்ளியில் படித்தபோதே ஒரு குழுவை உருவாக்கி, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் போன்றோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். திருமணம் முடிந்து சென்னையில் வாழ்க்கை ஆரம்பமானது. கணவர், "பிசினஸ்' செய்வதால், அவரின் துணையுடன் பலருக்கும் உதவிகளைச் செய்தேன். இருந்தாலும், சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாத குறை இருந்தது. ஒரு நாள் இரவு, என் வீட்டு வாசலில் மூதாட்டி ஒருவர் அழுவதைப் பார்த்து விசாரித்தேன்; எதுவும் பேசாமல் சென்று விட்டார். அடுத்த இருபது நாள்களில் சாலையோரம் அந்த மூதாட்டி இறந்து கிடந்தது தெரிந்தபோது மனது பாரமாகியது. உலகிலேயே துயரமானது, மரணத்திற்குப் பின் இறுதிச்சடங்கு செய்யக்கூட நமக்கு ஆள் இல்லை என்ற நினைப்புதான். அதனால், நானே அந்த மூதாட்டிக்கு ஈமச் சடங்குகள் செய்தேன். சேவை செய்த திருப்தியில், மன நிறைவை உணர்ந்த நான் இதைத் தொடர வேண்டுமென முடிவெடுத்தேன். சென்னையிலுள்ள காவல்நிலையம், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்துக்கும் எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து, அனாதைப் பிணம், இறுதிக் காரியங்கள் செய்யக்கூட வசதியில்லாத ஏழைக் குடும்பத்துச் சடலம் என, எதுவாக இருந்தாலும் தகவல் தருமாறு கூறினேன். நிறையத் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. உரிய வகையில் சடலங்களை அடக்கம் செய்யத் துவங்கினேன். அவசர மருத்துவ வாகனத்துக்கு 600 ரூபாய், ஆட்டோவிற்கு 300 ரூபாய்ச் செலவாகும். போகும்போதே தேங்காய், பழம், துணி, மாலை எல்லாம் வாங்கிச் செல்வேன். என் சேவையைப் பார்த்து, உதவி செய்யப் பலரும் முன்வர, "உத்ரா உதவும் சேவை மையம்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். தொண்டுகளில் எல்லாம் பெரிய தொண்டாக, பெண் வெட்டியான் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன்.
அன்பு நேயர்களே, ஆகஸ்ட் 19 இஞ்ஞாயிறு அனைத்துலக மனிதாபிமான நாள். “நான் உதவி தேவைப்படும் இடத்தில் இருந்தேன்” (I Was Here) என்ற தலைப்பில் இவ்வாண்டு இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மனிதாபிமானப்பணிகளின்போது இறந்தவர்களை நினைவுகூரவும், உலகின் பல பகுதிகளில் இலட்சக்கணக்கான மக்களுக்கு இந்தப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த அனைத்துலக தினம் உருவாக்கப்பட்டது. உலக அளவில் மனிதாபிமானப் பணிகளின் தேவையையும், அதற்குப் பன்னாட்டு அளவில் தேவைப்படும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் நோக்கத்திலும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2008ம் ஆண்டு டிசம்பரில் கூடிய ஐ.நா.வின் 63வது பொது அவையில் இத்தினம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈராக் தலைநகர் பாக்தாத் நகரிலுள்ள ஐ.நா.தலைமையகம் 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி கடும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் ஐ.நா.தூதர் Sergio Vieira de Mello உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். எனவே ஆகஸ்ட் 19ம் தேதியை அனைத்துலக மனிதாபிமான நாள் எனவும் அறிவித்தது ஐ.நா.பொது அவை. இப்பணிகளைச் செய்து கொண்டிருக்கும் போது கொல்லப்படுதல் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. கடந்த ஓராண்டில் மட்டும் 12 பேர் கொல்லப்பட்டனர். 5 குழந்தைகளுக்குத் தந்தையான வாகன ஓட்டுனர் ஒருவர் சூடானின் தென் Kordofanல் இம்மாதம் 4ம் தேதி கொல்லப்பட்டார் என்கிறார் WFP என்ற உலக உணவு திட்ட அமைப்பின் பேச்சாளர் El RealAudioMP3 isabeth Byrs. இவ்வாறு வருந்தும் ஐ.நா.பணியாளர்கள், இந்த உலக நாளை எவ்வாறு கடைப்பிடிக்கலாம் என்பதற்கும் சில வழிகளைக் காட்டுகின்றனர்.
பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு கொடுத்தல், சாமான் வாங்கும் ஒருவருக்கு உதவுதல், பொதுவான ஒரு சமுதாயத் திட்டத்திற்குத் திறமையைப் பகிர்ந்து கொள்ளல், சாலையில் பயணம் செய்ய முடியாமல் அல்லது சாலையைக் கடக்க முடியாமல் இருப்பவர்க்கு உதவுதல், தனிமையில் வாழும் வயதானவர்களைச் சந்தித்தல், மருத்துவமனையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு ஆறுதல் சொல்லுதல், அவரவர் ஊரிலுள்ள பிறரன்பு நிறுவனத்திற்கு உதவி செய்தல், பயன்படுத்தாதப் பொருள்களைத் தேவையில் இருப்போருக்குக் கொடுத்தல், அடுத்தவருக்கு முற்றத்தைச் சுத்தம் செய்ய உதவுதல், இளம் மாற்றுத்திறனாளிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல், நகரப் பூங்காவைச் சுத்தம் செய்தல், சமையல் செய்ய இயலாமல் துன்புறும் கர்ப்பிணிக்குத் தாய்க்கு உதவுதல், மதுபானம், போதைப்பொருள் போன்ற பழக்கத்திலுள்ளவர்கள் அவற்றிலிருந்து விடுதலை பெற உதவுதல்...
இவ்வாறு எங்கேயாவது யாருக்காவது ஏதாவது நல்ல செயல்கள் செய்து இந்த உலக நாளைச் சிறப்பிக்குமாறு ஐ.நா. கேட்டது. யாராவது ஒரு மனிதருக்கு ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும். “மக்கள் மக்களுக்கு” உதவ வேண்டும். 2011ம் ஆண்டில் ஏறக்குறைய 3 கோடியே 42 இலட்சம் பேர் HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்ந்தனர். இதே ஆண்டின் இறுதியில் உலகில் 2 கோடியே 64 இலட்சம் பேர் புலம் பெயர்ந்திருந்தனர். இவர்களில் அதிக அளவினர், சில இடங்களில் 65 விழுக்காட்டினர் முதியோர். பெண்களும் சிறுமிகளும் பல இடங்களில் பல வன்கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். இத்தகையோருக்கு சிறு உதவிகளைச் செய்யலாம். அலைபேசிக் குறுஞ்செய்திகள், இணையதளம் போன்றவை மூலம் சில வெளிநாட்டுச் சக்திகள் பரப்பிய வதந்திகளால் இந்நாள்களில் சென்னை, பெங்களூரில் வாழும் வடகிழக்கு மாநிலத்தவர் ஆயிரக்கணக்கில் தங்கள் இடங்களுக்குத் திரும்புகின்றனர். இத்திங்கள் இரமதான் விழாவுக்காகப் பெண்கள் மெகந்தியிட்டுத் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தவேளை, செஞ்சிப் பகுதியில் பரவிய வதந்தி, பெண்களை அச்சத்தில் வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த மக்களின் பயம் நீங்குவதற்கு நம்மால் இயன்ற சிறு சிறு மனிதாபிமான உதவிகளைச் செய்யலாம். உலகின் ஏழைகளில் 42 விழுக்காட்டினர் இந்தியாவில் வாழ்கின்றனராம். ஆதலால் ஏதாவது ஒரு சிறு மனிதாபிமானச் செயல் செய்வதற்கு ஒவ்வொரு நாளும் பல வாய்ப்புக்கள் நம்மைத் தேடி வருகின்றன. இவற்றை நழுவவிடாமல் நம்மிலுள்ள மனிதத்தை வெளிப்படுத்துவோம். கொல்கத்தாவில் சுமார் இரண்டாயிரம் கல்லூரி மாணவர்கள் இச்சனிக்கிழமையன்று சாலைகளில் ஊர்வலமாகச் சென்று பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை ஏபற்படுத்தியிருக்கின்றனர்.
ஒரு தாதியர் பயிற்சிப் பள்ளியில் மூன்றுபேர் அடங்கிய பேராசிரியர் குழு கேள்வி கேட்டு மதிப்பெண் போடும் கடைசித் தேர்வு அது. அதில் ஒரு மாணவி ஏறக்குறைய எல்லாக் கேள்விகளுக்கும் நன்றாகப் பதில் சொன்னார். கடைசியாக பாடத்தோடு எதுவுமே தொடர்பில்லாத கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. உங்களது வகுப்பறையைத் தினமும் சுத்தம் செய்யும் அந்தப் பணியாளின் பெயர் என்ன? அல்லது அந்தப் பணியாளை நீங்கள் என்றாவது ஒருநாள் பாராட்டியது உண்டா? என்பதே அக்கேள்வி. அம்மாணவி சங்கடத்தில் நெளிந்தார். அப்போது அந்தத் தேர்வுக் குழு அம்மாணவியிடம், “நீங்கள் செய்யவிருக்கும் மருத்துவப்பணியில் சந்திக்கவிருக்கும் ஒவ்வொரு நோயாளியும் ஒரு மனிதர். அந்நோயாளிக்கு உங்களது அன்பும் அக்கறையும் அவசியம். நீங்கள் அந்நோயாளிக்கு அடுத்திருப்பவராக இருக்க வேண்டும்” என்று அறிவுரை சொன்னது. பின்னர் அம்மாணவியும் அந்தப் பணியாளைப் பார்த்துத் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
உதவி தேவைப்படும் சின்னஞ்சிறிய சகோதரர்க்கு நீங்கள் உதவுகின்ற போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்று இயேசு சொன்னார். அன்பர்களே, ஆயிரக்கணக்கான மனிதநேய உள்ளங்களைக் காண சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட வேண்டுமென்ற அவசியம் இல்லை. நமக்கு நாமே கேள்விகளைக் கேட்டுக் கொள்வோம். ஒருவர் என்னிடம் உதவி கேட்கும்போது அதை முழுமனதோடு செய்கின்றேனா? அல்லது உதவி செய்ய மறுக்கின்றேனா? உதவி தேவைப்படும் அந்த இடத்தில் நான் இருந்தேன் என்று சொல்ல முடியுமா? உதவி தேவைப்படும் ஒருவருக்கு நானாக முன்வந்து உதவுகிறேனா? பிறரன்பையே சிந்தித்து, பிறரன்பையே மூச்சுக் காற்றாகச் சுவாசித்து மனிதாபிமானம் வளர்ப்போம்.








All the contents on this site are copyrighted ©.