2012-08-21 16:04:40

ரிமினி கூட்டத்திற்குத் திருத்தந்தை வாழ்த்து


ஆக.21,2012. "இயல்பாகவே, மனிதர் இறைவனோடு உறவு கொண்டிருக்கிறார்" என்ற தலைப்பில் இத்தாலியின் ரிமினியில் நடைபெற்றுவரும் கூட்டத்திற்கு நல்வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆகஸ்ட் 19, இஞ்ஞாயிறன்று ரிமினியில் தொடங்கியுள்ள இக்கூட்டத்திற்கென அந்நகர் ஆயர் Francesco Lambiasiக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, மனிதர் பற்றியும், இறைவனுக்கான அவரது ஏக்கம் பற்றியும் பேசுவதென்பது, முதலில் மனிதருக்கு இயல்பாகவே படைத்தவரோடு இருக்கின்ற உறவை ஏற்பதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதர் இறைவனின் படைப்பு; படைப்பு என்ற சொல், இன்றைய உலகோடு ஏறக்குறைய ஒத்துவராத ஒன்றாகத் தெரிகின்றது; மனிதர் தன்னிலே முழுமையானவர், தனது இறுதிக்கதிக்குத் தானே பொறுப்பானவர் என்று நினைக்கவே நாம் விரும்புகின்றோம் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
மனிதர் இறைவனோடு தான் கொண்டுள்ள அடிப்படை உறவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றதையும் விடுத்து அவரது இதயம் இன்னும் இறைவனைத் தேடுகின்றது, ஆயினும் இத்தேடலை தவறான திசையில் தேடுகின்றார் என்று கூறியுள்ளார் திருத்தந்தை.
போதைப்பொருள்கள், முறையற்ற வழிகளில் வாழும் பாலியல் வாழ்வு, எந்தவிலை கொடுத்தேனும் வெற்றியை அடைய முயற்சித்தல், தீவிர மத உணர்வின் ஏமாற்று வழிகள் போன்ற ஆபத்தான இடங்களுக்கு இட்டுச்செல்லும் சலிப்பூட்டும் மற்றும் போலியானவைகளில் மனிதர் வெறித்தனமாக முடிவில்லாதவரைத் தேடத் தொடங்குகின்றார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும் இக்கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து எட்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.
“ஒன்றிப்பும் விடுதலையும்” என்ற கத்தோலிக்கப் பொதுநிலை இயக்கத்தால் 1980ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ரிமினியில் இக்கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. மக்கள் மத்தியில் நட்புறவை ஏற்படுத்தும் நோக்கத்தையும் இக்கூட்டம் கொண்டுள்ளது.
1950களில் மிலானில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அருட்பணி Luigi Giussani, இளையோர் தங்களது கத்தோலிக்க விசுவாசத்தை அன்றாட வாழ்வில் வாழ்வதற்கு உதவும் நோக்கத்தில் இவ்வியக்கத்தை உருவாக்கினார்.







All the contents on this site are copyrighted ©.