2012-08-21 16:12:09

தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள சிறுமி விவகாரத்தை மனித உரிமை நிறுவனங்கள் ஊதிப் பெரிதுபடுத்தின : இராவல்பிண்டி ஆயர், Paul Bhatti குற்றச்சாட்டு


ஆக.21,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் சிறையில் வைக்கப்பட்டுள்ள Rimsha Masih என்ற 11 வயது சிறுமி விவகாரத்தில் சமூக ஆர்வலர்களும் மனித உரிமை நிறுவனங்களும் நடந்து கொள்ளும் விதம் குறித்து குறை கூறியுள்ளார் Islamabad-Rawalpindi ஆயர் Rufin Anthony.
சமூக ஆர்வலர்களும் மனித உரிமை நிறுவனங்களும் தங்களது சொந்த ஆதாயங்களின் அடிப்படையில் இவ்விவகாரத்தை விவரித்துள்ளனர் எனக்கூறிய ஆயர் அந்தோணி, இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றும் குறை கூறினார்.
ஆயரின் இதே கருத்தையே வெளிப்படுத்தியுள்ள பாகிஸ்தான் பிரதமரின் தேசிய நல்லிணக்க ஆலோசகர் Paul Bhatti, இச்சிறுமியின் விவகாரம், 600க்கு மேற்பட்ட குடும்பங்கள் வன்முறைக்குப் பயந்து வெளியேறவும் காரணமாகியுள்ளது என்றும் கூறினார்.
இவ்விவகாரத்தில் இச்சிறுமிக்குச் சாதகமாக முடிவுகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையையும் கத்தோலிக்க அரசியல்வாதியான Paul Bhatti தெரிவித்தார்.
Down's syndrome என்ற மனநிலைக் குறைவுள்ள சிறுமி Rimsha, அரேபிய மொழியையும், குரானையும் சொல்லித்தர உதவும் ஒரு நூலின் சில பக்கங்களை எரித்தார் என்று குற்றச்சாட்டப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
Rimsha மீது சாட்டப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபணமானால், அச்சிறுமிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் 1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேவ நிந்தனைச் சட்டத்திற்குக் கீழ், இதுவரை குறைந்தது 1000 பேருக்கு மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 60க்கும் மேற்பட்டோர் சட்டங்களுக்குப் புறம்பாக மக்களின் வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
வயது குறைந்த ஒருவரை, தேவ நிந்தனைச் சட்டத்திற்குக் கீழ் கைது செய்திருப்பது இதுவே முதல் முறை. மனநலம் சரியில்லாத இவரைக் கைது செய்திருப்பதைக் கண்டு இஸ்லாமியரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.