2012-08-20 15:08:45

அகில உலக மனிதாபிமான நாளுக்கு ஐ.நா. பொதுச்செயலரின் வாழ்த்துச் செய்தி


ஆக.20,2012. தனிப்பட்டவர்களின் நல்லச் செயல்கள் சிறிதாகத் தெரியலாம், ஆயினும் அவை அனைத்தும் சேரும்போது, நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் சக்திவாய்ந்த ஓர் அலையாக மாறும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
அகில உலக மனிதாபிமான நாள் இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், பல்வேறு இன்னல்கள், இழப்புக்கள் மத்தியிலும் தொடர்ந்து நற்பணியாற்றிவரும் ஐ.நா. உழைப்பாளிகளையும், இன்னும் மற்ற நல்லுள்ளம் கொண்டோரையும் வாழ்த்தினார்.
2003ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி, ஈராக் நாட்டின் Canal உணவு விடுதியில் ஏற்பட்ட ஒரு குண்டுத் தாக்குதலில் மத்தியக் கிழக்குப் பகுதியில் ஐ.நா.சார்பில் உழைத்து வந்த தலைமை அதிகாரி Sergio Vieira de Mello உட்பட 22 ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நாளின் நினைவாக, 2009ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 19ம் தேதி அகில உலக மனிதாபிமான நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.
இவ்வாண்டு கடைபிடிக்கப்பட்ட இந்த நாளையொட்டி, 100 கோடி மக்களை ஏதாவது நற்செயல் செய்வதற்குத் தூண்டும் வகையில், “நற்செயல் ஒன்றில் ஈடுபட நானும் இங்கிருந்தேன்” என்ற பொருள்படும் “I Was Here.” என்ற ஒரு முயற்சியில் ஐ.நா. அவை ஈடுபட்டது.
புகழ்பெற்ற பாடகர் Beyoncé ன் பாடலுடன் துவக்கப்பட்ட இந்த முயற்சியின் வீடியோ இசைப்பதிவு Dubai, Geneva, Addis Ababa, New York பெருநகரம் என்ற பல இடங்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது.








All the contents on this site are copyrighted ©.