2012-08-17 15:38:53

கடவுளைச் சார்ந்து நின்ற பாராளுமன்ற உறுப்பினருக்குப் பிலிப்பின்ஸ் திருஅவை பாராட்டு


ஆக.17,2012. அரசியல் முடிவுகள் எடுக்கும்போது, கடவுளைச் சார்ந்து நின்று, விசுவாசக் கண்ணோட்டத்துடன் செயல்படும் தலைவர்களை திருஅவை பாராட்டுகிறது என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Jose Palma கூறினார்.
குழந்தைபேறு பற்றிய கருத்து வேறுபாடுகள் மிகுந்த ஒரு சட்டவரைவு பிலிப்பின்ஸ் பாராளுமன்றத்தில் விவாதத்தில் உள்ளது. இந்த சட்டவரைவின் குறைகளைச் சுட்டிக்காட்டி, பாராளுமன்ற உறுப்பினர் Vicente Sotto தெரிவித்துள்ள கருத்துக்களைப் பாராட்டி பேராயர் Palma இவ்வாறு கூறினார்.
கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தியதன் ஒரு பக்க விளைவாக 1975ம் ஆண்டு தனக்குப் பிறந்த மகனை, ஐந்து மாதங்களில் தான் இழக்க வேண்டியிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் Sotto, மனித உயிர்களைத் தடுக்கும் அரசின் எந்த முயற்சியையும் தான் ஆதரிக்கப் போவதில்லை என்று கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினரின் இந்தக் கூற்றுக்கு மணிலா பேராயர் மட்டுமன்றி, ஏனைய ஆயர்களும் தங்கள் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.
வளர்ச்சியடைந்துள்ள சிங்கப்பூர் போன்ற நாடுகள் கருக்கலைப்பு, கருத்தடை என்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டதன் விளைவுகளைத் தற்போது உணர்ந்து வருகின்றனர் என்று பேராயர் Palma அண்மையில் அனுப்பியிருந்த ஒரு மடலில் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.