2012-08-16 15:28:58

மனித உயிருக்கு ஆதரவாக அமெரிக்க இளையோர் நாடு முழுவதும் மேற்கொண்ட நடைபயணம்


ஆக.16,2012. மனித உயிருக்கு ஆதரவு தரும் நோக்கத்துடன் 40க்கும் மேற்பட்ட அமெரிக்க இளையோர் நாடு முழுவதும் மேற்கொண்ட நடைபயணம் அண்மையில் வாஷிங்டன் நகரில் நிறைவு பெற்றது.
கிறிஸ்துவ மறையின் தூண்களாக விளங்கும் திருத்தூதர்கள், உயிர்களைப் போற்றும் கலாச்சாரத்தை வளர்த்ததுபோல், இளையோரும் உயிரைப் போற்றி வளர்க்கவேண்டும் என்று 1993ம் ஆண்டு திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் உலக இளையோர் நாளில் விடுத்த அழைப்பின் அடிப்படையில் 1995ம் ஆண்டு Crossroads என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.
மனித உயிரை மதிக்காமல், கருக்கலைப்பு, கருத்தடை போன்ற செயல்பாடுகள் பெருகிவரும் அமெரிக்க மண்ணில், மனித உயிர்களை மதிக்கவேண்டும் என்ற விருதுவாக்குடன் Crossroads அமைப்பைச் சேர்ந்த இளையோரால் இவ்வாண்டு மேமாதம் 19ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்குக் கடற்கரையில் ஆரம்பமான இந்த நடைப்பயணம், 40 மாநிலங்கள் வழியே மேற்கொள்ளப்பட்டது.
இந்த முயற்சியில் ஈடுபட்ட இளையோர், ஒவ்வொரு மாநிலத்திலும் பல ஆலயங்களில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அதேநேரம், அப்பகுதிகளில் அமைந்திருந்த கருகலைப்பு மருத்துவமனைகளுக்கு முன் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
Crossroads அமைப்பையொத்த மற்ற இளையோர் அமைப்புக்கள் கனடா, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் துவக்கப்பட்டுள்ளன என்று CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.