2012-08-16 15:18:11

பிலிப்பின்ஸ் நாட்டில் HIV/AIDS நோயின் தாக்கம் கூடிவருவது கவலையைத் தருகிறது - மணிலா பேராயர்


ஆக.16,2012. HIV/AIDS நோயைப் பற்றிய தெளிவான அறிவு கத்தோலிக்க மக்களுக்கும், துறவியருக்கும் இருக்க வேண்டும் என்று மணிலா உயர்மறைமாவட்டப் பேராயர் Luis Antonio Tagle கூறினார்.
அமைதியாகப் பரவிவரும் இந்தக் கொள்ளை நோயைப்பற்றிய அறிவும், இந்நோய் கண்டோருக்கு ஆற்றக்கூடிய பணிகள்பற்றியத் தெளிவும் அனைவருக்கும் அவசியம் என்று பேராயர் Tagle இப்புதனன்று வெளியிட்ட ஒரு சுற்றுமடலில் கூறியுள்ளார்.
பிலிப்பின்ஸ் நலத்துறையின் கணிப்புப்படி ஒவ்வொரு நாளும் 9 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறிய பேராயர் Tagle, உலகெங்கும் இந்நோயின் தாக்கம் குறைந்துவரும் வேளையில், பிலிப்பின்ஸ் நாட்டில் இந்நோயின் தாக்கம் கூடிவருவது கவலையைத் தருகிறது என்று கூறினார்.
பிலிப்பின்ஸ் நலத்துறை அண்மையில் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, 2010ம் ஆண்டு இந்நோய் கண்டோரின் எண்ணிக்கை 1591 ஆக இருந்ததென்றும், இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் இந்நோய் கண்டோரின் எண்ணிக்கை 1600ஐத் தாண்டிவிட்டதென்றும் தெரிகிறது.
எய்ட்ஸ் நோய் கண்டதால் நம்பிக்கை இழந்து வாழும் மக்களுக்கு நம்பிக்கை தரும் பணியில் கத்தோலிக்கத் திருஅவை பரிவுடன் ஈடுபடவேண்டும் என்றும், திருஅவையில் பணிபுரிவோருக்கும், அருள்பணி பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளோருக்கும் இந்நோய் பற்றிய அடிப்படை விவரங்கள் தெரிந்திருப்பது அவசியம் என்றும் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை சென்ற ஆண்டு வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில், வலியுறுத்தியது.








All the contents on this site are copyrighted ©.