2012-08-15 15:52:16

பிலிப்பின்ஸ் அரசுக்கு அந்நாட்டு ஆயர்கள் பேரவையின் வன்மையானக் கண்டனம்


ஆக.15,2012. மக்கள்பேறு நலம் பற்றிய பிரச்சனைகள் நிறைந்த ஒரு சட்ட வரைவை, தகுந்த கலந்தாலோசனைகள் இன்றி சட்டமாக்க பிலிப்பின்ஸ் அரசு காட்டும் அவசரத்தை அந்நாட்டு ஆயர்கள் பேரவை வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஆயர்கள் பேரவை இத்திங்களன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், மக்களின் மனசாட்சிக் குரலை ஒடுக்குவதற்கு அரசு பயன்படுத்தும் சக்தி அடக்கு முறைக்கு ஒப்பாகும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
பிரச்சனைக்குரிய இந்தச் சட்டம் அமலாக்கப்பட்டால், ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுவர் சிறுமியருக்கு பாலியல் கல்வியைக் கட்டாயமாகப் புகட்டுதல், கருத்தடை சாதனங்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வழி செய்தல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இந்தச் சட்டவரைவு பாராளு மன்றத்தில் நுழைக்கப்பட்டது முதல், தற்போது அதனை சட்டமாக்கும் அவசரம் வரை அரசு மேற்கொண்டுள்ள அனைத்து செயல்பாடுகளும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவரும் Cebu பேராயருமான Jose Palma கூறினார்.








All the contents on this site are copyrighted ©.