2012-08-14 17:03:27

ஒப்புரவுக்கான பணியில் திருச்சபை மீதே மக்களின் நம்பிக்கை


ஆக.14,2012. கென்யாவில் ஒப்புரவுச்சூழலை உருவாக்குவதில் அரசைவிட தலத்திருஅவை மீதே அதிக நம்பிக்கைக்கொண்டுள்ளதாக அந்நாட்டின் 53.4 விழுக்காட்டு மக்கள் அறிவித்துள்ளனர்.
தலைநகர் நைரோபியிலுள்ள "Hakimani" என்ற இயேசு சபை சமூக மையம் கடந்த மூன்று மாதங்களாக கென்யாவின் 30 மாவட்டங்களில் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.
கென்யாவின் அரசுத்தலைவர் தேர்தலைத் தொடர்ந்து அந்நாட்டில் 2007 மற்றும் 2008ல் துவங்கிய வன்முறைகளின் விளைவுகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டு இயேசு சபையினர் எடுத்துள்ள இந்த ஆய்வில் கலந்துகொண்டோருள் 93 விழுக்காட்டினர், நாட்டில் ஒப்புரவு இடம்பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உரையாற்றிய கென்ய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் பேராயர் Zacchaeus Okoth, 2007 மற்றும் 2008ம் ஆண்டின் வன்முறைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டி, மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இன்னும் மக்கள் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருவதாக எடுத்துரைத்த பேராயர், குற்றமிழைத்தவர்களுக்கும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒருநாள் நிச்சயம் நீதி வழங்கப்படும் என்பதில் திரு அவை உறுதியான நம்பிக்கைக்கொண்டிருப்பதாக மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.