2012-08-13 16:06:26

பிலிப்பின்ஸ், சீனா, ஈரான் மக்களுக்காக திருத்தந்தையின் விண்ணப்பம்


ஆக.13,2012. தன் மூவேளை செப உரையின் இறுதியில் பிலிப்பின்ஸ், சீனா மற்றும் ஈரான் மக்களுடன் விசுவாசிகள் தங்கள் ஒருமைப்பாட்டை வெளியிடவேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு விடுத்தார்.
பிலிப்பின்ஸிலும், சீனாவிலும் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், ஈரானில் நில நடுக்கத்தால் துயருக்குள்ளாகியிருக்கும் மக்களையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, பெரும் எண்ணிக்கையில் இந்நாடுகளில் இறந்துள்ள மக்களுக்காகச் செபிக்குமாறும், இவ்வியற்கைப் பேரிடர்களால் காயமடைந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோருடன் ஒருமைப்பாட்டை அளிக்குமாறும் விண்ணப்பித்தார்.
துன்புறும் மக்களுக்கு நம் உதவிகளையும், ஒருமைப்பாட்டையும் வழங்குவோம் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
பிலிப்பின்ஸ் நாட்டில் அண்மையில் பெய்த பெருமழையால் ஏறத்தாழ 100 பேர் உயிரிழந்தனர், 15 இலட்சம் பேர் தங்கள் இல்லங்களை இழந்து, வேறு இடங்களில் தங்கவேண்டியுள்ளது. சீனாவிலும் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர், 8,67,000 பேர் தங்கள் உறைவிடங்களை இழந்துள்ளனர்.
இதேபோல், ஈரானின் வடமேற்குப் பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் ஏறத்தாழ 250 பேர் இறந்திருக்கலாம் என்றும், 2000க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்நிலநடுக்கத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலும் அழிவுக்குள்ளாகியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.