2012-08-13 16:03:43

திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை


ஆக.13,2012. ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த இயேசுவின் புதுமையைப்பற்றி இவ்வாரமும் தன் மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இறைவனால் வாக்களிக்கப்பட்ட நாட்டைநோக்கிச் செல்லும் பாதையில், இஸ்ரயேல் மக்களுக்கு வானிலிருந்து 'மன்னா' எனும் உணவு வழங்கப்பட்டதைக் குறித்தும், தன்னிடம் வந்த பெருந்திரளான மக்களுக்கு 'மன்னா'வைத் தாண்டிய முடிவற்ற உணவு தானே என்பதை இயேசு எடுத்துரைத்ததையும் தன் செப உரையில் திருத்தந்தை குறிப்பிட்டார்.
திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான Castel Gondolfoவிலிருந்து அவர் வழங்கிய உரையில், மனிதருக்கு முழு நிறைவான வாழ்வை வழங்கவும், மனிதரை இறை வாழ்வுக்கு அறிமுகம் செய்யவும் இறைமகன் வானிலிருந்து உணவாக மண்ணுலகுக்கு இறங்கிவந்தார் என்று கூறினார்.
தங்களுக்கு ஊட்டம் தரும் உண்மையான உணவு சட்டமே, அதாவது, மோசே வழியாக இறைவன் வழங்கிய வார்த்தையே என்பது இஸ்ரயேல் மக்களின் எண்ணம்; ஆனால், தற்போது இயேசு, தானே மனுவுருவான இறைவார்த்தை என தன்னை வெளிப்படுத்துகிறார் என மேலும் தன் மூவேளை செப உரையின்போது குறிப்பிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.