2012-08-13 16:09:15

ஈரானில் காரித்தாஸ் அமைப்பின் உதவிகள்


ஆக.13,2012. ஈரான் நாட்டில் நில நடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களிலேயே அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் பணிகளைத் துவக்கியுள்ளதாக அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு அறிவித்தது.
வடமேற்கு ஈரான் பகுதியான Tabrizல் இடம்பெற்ற நில அதிர்ச்சியில் Ardebil, Meskhinshahr - Ahar, மற்றும் Varzeghan கிராமங்களின் 80 விழுக்காட்டு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகக் கூறும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு, நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளதாகவும், ஆயிரக்கணக்கில் குடும்பங்கள் தங்கள் உறைவிடங்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இயற்கைப்பேரிடர்களில் காயமுற்றோருக்கு புனர்வாழ்வுத்திட்டங்களை வகுத்தல், வேலைகளை இழந்தோருக்கு பயிற்சி அளித்தல், விதவைகளுக்கு உதவியளித்தல், பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் கழிவறைகள் கட்டிக்கொடுத்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் போன்றவற்றிலும் காரித்தாஸ் பணியாளார்கள், ஈரானில் ஈடுபட்டுவருவதாக காரித்தாஸ் அமைப்பு தெரிவித்தது.
2003ம்ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானின் Bam நகரில் இடம்பெற்ற பெரும் நில அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் காரித்தாஸ் அமைப்பு, நான்கு கல்விக்கூடங்களைக் கட்டிக்கொடுத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.