2012-08-11 16:39:04

ஆகஸ்ட் 12, பொதுக்காலம் - 19ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 ஆகஸ்ட் 12, இஞ்ஞாயிறன்று இலண்டன் மாநகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிறைவடைகின்றன. நான்காண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ஓர் தனித்துவம் மிகுந்த நிகழ்வு இது என்பதால், ஒலிம்பிக் விளையாட்டுக்களை மையப்படுத்தி இன்றைய ஞாயிறு சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
இலண்டனில் நிறைவடைவது... ஒலிம்பிக் விளையாட்டுக்களா? ஒலிம்பிக் போட்டிகளா? இப்படி ஒரு கேள்வியை எழுப்புவது வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை, இது சிந்திக்கவேண்டிய கேள்வி. ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை மட்டுமல்ல, வாழ்வைப் பொறுத்தவரை நாம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை நிர்ணயிக்கும் ஒரு கேள்வி இது.
இலண்டனில் நிறைவடைவது... ஒலிம்பிக் விளையாட்டுக்களா? ஒலிம்பிக் போட்டிகளா? ஆங்கிலத்தில் நாம் Olympic Games என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். Olympic Competitions என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. தமிழிலோ பெரும்பாலான நேரம் நாம் ஒலிம்பிக் போட்டிகள் என்றே குறிப்பிடுகிறோம். வெகு சிலரே இதை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்று குறிப்பிடுவர். இரு வாரங்களுக்கு முன் நான் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் துவக்கவிழாவைப் பற்றி ஞாயிறு சிந்தனையை எழுதியபோது, ஒலிம்பிக் போட்டிகள் என்ற வார்த்தையையே பயன்படுத்தியிருந்தேன். நான் எழுதியதை இரண்டாம் முறை வாசித்தபோதுதான், 'போட்டிகள்' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, 'விளையாட்டுக்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.
விளையாட்டுக்களுக்கும், போட்டிகளுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. விளையாட்டுகள் எல்லாமே போட்டிதானா? அல்லது, போட்டிகளையும் விளையாட்டாகப் பார்க்க நம்மால் இயலுமா? வார்த்தைகளை வைத்து நான் விளையாடி, நேரத்தை வீணடிப்பதாக எண்ணவேண்டாம். கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிவடைந்துள்ள இந்த நேரத்தில் இவ்விரு வார்த்தைகளையும், அவை வெளிப்படுத்தும் எண்ணங்களையும் சிந்திப்பது பயனளிக்கும். விளையாடுவதும், போட்டியிடுவதும் இரு வேறு உலகங்கள், பல நேரங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட உலகங்கள் என்பதை ஓர் உண்மை நிகழ்வின் மூலம் விளக்க முயல்கிறேன்.

2008ம் ஆண்டு, பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்ற Shawn Johnson என்பவர் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் இது. ஜிம்னாஸ்டிக் ஒட்டுமொத்த போட்டியில் (Individual all-around competition) வெள்ளிப் பதக்கம் வென்றவர் இவர். Shawn வெள்ளிப்பதக்கம் வென்றார் என்று நான் சொன்னதும், ஓ, வெள்ளியா? தங்கம் இல்லையா? என்ற கேள்வி நம் மனதில் எழுந்திருக்கலாம். நாம் சொல்லும், அல்லது கேட்கும் கதைகள் பெரும்பாலும் தங்கம் வென்றவர்களின் கதைகளாக இருப்பதால் எழுந்த கேள்வி இது. இதே கேள்விதான் Shawn மனதிலும் எழுந்தது. எழுந்தது என்று சொல்வதை விட, இந்தக் கேள்வி அவர் மனதில் ஆழமாய் பாய்ந்தது என்றே சொல்லவேண்டும்.

ஒலிம்பிக் விளையாட்டுக்களில் வெள்ளியும், வெண்கலமும் வென்றவர்களை குறைத்து மதிப்பிடும் போக்கு அதிகம் உள்ளது. வெள்ளியையும், வெண்கலத்தையும் அவர்கள் வென்றனர் என்று சொல்வதை விட, தங்கத்தை அவர்கள் இழந்தனர் என்ற எண்ணமே அதிகம் பேசப்படும். தங்கம் வென்றவர்களைத் தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடுவதும், வெள்ளி, வெண்கலம் வென்றவர்களை ஒப்புக்காகப் புகழ்வதும் நாம் காணும் காட்சிகள். இதே அனுபவத்தை Shawnம் அடைந்தார்.
Shawnம் அவரது நெருங்கியத் தோழி Nastia Liukinம் ஜிம்னாஸ்டிக் சாகசங்களைச் சிறுவயது முதல் இணைந்து பயின்றவர்கள். ஜிம்னாஸ்டிக்கில் நான்கு பிரிவுகளைக் கொண்ட ஒட்டுமொத்த போட்டியில் Shawnதான் தங்கம் வெல்வார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இந்த நான்கு பிரிவுகளில் மூன்று பிரிவுகள் முடிந்ததும், தான் பெற்றிருந்த புள்ளிகளைப் பார்த்தார் Shawn. அவருக்கும், Nastiaவுக்கும் இடையே அதிக வேறுபாடு இருந்தது. 4வது பிரிவில் தான் முழுமையாக 10 புள்ளிகள் பெற்றாலும் Nastiaவை வென்று, தங்கம் வெல்லமுடியாது என்பது Shawnக்குத் தெளிவானது. அப்போது அவர் மனதில் போராட்டம் சூழ்ந்தது. தங்கம் வெல்லவேண்டும் என நான் கண்டுவந்த கனவு கைநழுவிப் போகிறதே... நான் தங்கம் வெல்வது நிச்சயம் என்று என் குடும்பத்தினர், குழுவினர், என் நாட்டு மக்கள் எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனரே... தங்கம் வெல்லாமல் திரும்பினால், பெரும் தலைகுனிவாகிவிடுமே... பேசாமல், போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாமா? என்ற எண்ணங்களுடன் Shawn போராடினார்.

போராட்ட மேகங்கள் திரளும்போது, மின்னலைப்போல் ஒளியும் தோன்றுமல்லவா? அதுபோல், Shawn மனதில் ஒளியொன்று தோன்றியது. அந்த ஒளியில் அவர் உணர்ந்த உண்மைகளைத் தன் சுயசரிதையில் அவர் இவ்வாறு எழுதியுள்ளார்: "தங்கம் கைநழுவிச் சென்றுவிட்டது என்பதை நான் முழுவதும் உணர்ந்து ஏற்றுக் கொண்டபோது, நான் இதுவரை அனுபவித்திராத ஓர் அமைதி என்னுள் நிறைந்தது. மீதம் உள்ள அந்த ஒரு பிரிவு விளையாட்டில், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கலந்துகொள்ளப் போகிறேன். மூன்று வயதுமுதல் நான் விரும்பி விளையாடிய ஜிம்னாஸ்டிக் அசைவுகளை மீண்டும் ஒரு குழந்தையைப்போல், யாருடனும் போட்டி போடாமல், என் மகிழ்வுக்காக விளையாடப் போகிறேன். இப்படி நான் உள்ளார்ந்த மகிழ்வோடு விளையாடினால் என்னென்ன சாகசங்கள் செய்யமுடியும் என்பதை இவ்வுலகம் பார்க்கட்டும்." என்று Shawn தனக்குத் தானே சொல்லிக்கொண்டார்.
அந்த இறுதிப் பிரிவில் அவர் செய்த சாகசங்கள் மக்களைப் பிரமிப்பில் ஆழ்த்தின. முடிவில், அவரது தோழி Nastia தங்கத்தையும், Shawn வெள்ளியையும் வென்றனர். அமெரிக்க ஒலிம்பிக் வரலாற்றில், பெண்கள் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்களில், தங்கம், வெள்ளி இரண்டையும் வென்றது இதுவே முதல் முறை. பதக்கம் அணிவிக்கும் மேடையில் இரு தோழிகளும் மகிழ்வின் உச்சத்தில் நின்றனர். பதக்கம் பெற்றதும் அவர்களைப் பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்தனர். வெள்ளியை வென்றது உங்களுக்கு எவ்வளவு மகிழ்வைத் தந்தது என்று ஒருவரும் Shawn இடம் கேட்கவில்லை, மாறாக, தங்கத்தை நீங்கள் வெல்லவில்லையே, அது உங்களை எவ்வளவு பாதித்துள்ளது என்ற கேள்வியால் அவரைத் துளைத்தனர். வெள்ளி வென்றதில் அவர் அடைந்த மகிழ்வு, நிருபர்களின் கேள்விகளால் மறைந்தது. இருந்தாலும், அவர் அன்று கற்றுக்கொண்ட பாடம் அவரைப் பெரிதும் புடமிட்டது என்று தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

அந்தப் பாடம் என்ன? மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கள், கணிப்புகள் என் மகிழ்வை, என் வாழ்வைத் தீர்மானிக்கவிடக் கூடாது. தங்கம் வெல்வது மட்டுமே வெற்றி; வெள்ளி வெல்வது தோல்வி என்பது நிருபர்களின் கருத்து. அது என் கருத்தல்ல. ஆனந்தமாக, ஆத்மார்த்தமாக விளையாடி வெள்ளியை வெல்வதும் உண்மையிலேயே வெற்றிதான் என்பது என் கருத்து. பலகோடி இளையோர் அடையமுடியாத ஒரு சிகரத்தை, நான் அடைந்தது நிறைவான ஒரு வெற்றிதான் என்று Shawn தனக்குத்தானே அந்நேரத்தில் சொல்லித்தந்த பாடம் தன்னைக் காத்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிகழ்வுக்குப் பின், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் Shawn மேலும் ஒரு தங்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றார். ஆனால், அந்த முதல் போட்டியில் அவர் வென்ற வெள்ளியே தான் மிகவும் மதிக்கும் ஒரு வெற்றி என்று அவர் தன் நூலில் கூறியுள்ளார். அவர் எழுதியுள்ள சுயசரிதையின் தலைப்பு: “Winning Balance”, அதாவது, "சமநிலையை வெல்வது".
தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று பதக்கங்களை வெல்வதற்கு உடலைப் பயிற்றுவிக்கலாம். ஆனால், உள்ளுக்குள் 'சமநிலையை வெல்வதற்கு' மனதை நாம் பயிற்றுவிக்கவேண்டும். பெரும்பாலான நேரங்களில் இந்த சமநிலையை, இந்த ஆழமான அமைதியை வென்றவர்களுக்கு பந்தயங்களை வெல்வதும் எளிதாகும்.

மற்றொரு ஒலிம்பிக் விளையாட்டு வீரர் இதைப்பற்றி பேசியிருக்கிறார்... 1972ம் ஆண்டு Munich நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. போட்டிகள் போர்களாக உருவெடுத்து Munich ஒலிம்பிக் விளையாட்டுக்களை இரத்தமயமாக்கியது நமக்கு நினைவிருக்கலாம். இந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 100, 200 மீட்டர் ஓட்டங்களில் தங்கம் வென்றவர் Valery Borzov என்ற இரஷ்ய வீரர்.

Valeryயை ஓட்டப்பந்தயங்களுக்குப் பயிற்றுவித்தவர் Boris Voitas. இவர் தந்த ஒரு வியக்கத்தக்கப் பயிற்சி இதுதான். காகிதத் துண்டில் ஒரு குழாயைச் செய்து, அதனைப் புகை பிடிப்பவர்களைப் போல் பற்களுக்கு இடையில் வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் 100 மீட்டர் பந்தயம் ஓடவேண்டும். பந்தயத்தின் இறுதியில் அந்தக் காகிதக் குழாய்களைப் பயிற்சியாளர் சோதிப்பார். யாருடையக் காகிதக் குழாய் பற்களால் கடிக்கப்படாமல் இருந்ததோ அவர்தான் உண்மையான ஓட்டப்பந்தய வீரர் என்று பயிற்சியாளர் அறிவித்தார். 100 மீட்டர் பந்தயத்தில் இது சாத்தியமா என்று கேட்கலாம். பயிற்சியாளர் Boris Voitasன் எண்ணங்கள் தீர்க்கமானவை. எந்த வீரர் பதட்டமின்றி, தன் ஓட்டத்தை அனுபவித்து ஓடுகிறாரோ, அவரால்தான் வெற்றி பெறமுடியும். இதற்கு மாறாக, வெல்லவேண்டும், வென்றே ஆகவேண்டும், அடுத்தவர்களைவிட வேகமாகச் செல்லவேண்டும் என்ற பதட்டங்களை மனதில் சுமந்துகொண்டு ஓடினால், மனதில் பெரும் இறுக்கம் உருவாகும், அந்த இறுக்கம் உடலில், தசை நார்களில் வெளிப்படும். வேகம் குறையும்... மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரனால் மட்டுமே பதட்டமின்றி ஓடமுடியும்... இவைதான் பயிற்சியாளர் Borisன் முடிவுகள்.
பயிற்சியாளர் சொல்லித்தந்த இந்தத் தாரக மந்திரத்தைப் பின்பற்றி, Valery Borzov 1972ம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டியில் 100, 200 மீட்டர் பந்தயங்களில் தங்கத்தை வென்றார். அதுவரை இந்தப் பந்தயங்களில் எந்த இரஷ்யரும் அமெரிக்கர்களைத் தோற்கடித்ததில்லை. எனவே, Valeryன் முயற்சிகளை அமெரிக்க வீரர்கள் கேலி செய்து வந்தனர். அமெரிக்கர்களின் கேலிச் சொற்களை நிருபர்கள் இவரிடம் கூறி, இவரது பதிலைக் கேட்டபோது, "நான் கடிகாரத்துடன் (Stop watch) மட்டுமே போட்டியிடுகிறேன். வேறு எந்த வீரரோடும் அல்ல." என்று பதிலளித்தார். அற்புதமான பதில் இது. போட்டிகளை மாறுபட்ட கண்ணோட்டத்தோடு காணும் திறமை இது. Valery மற்றவர்களுடன் போட்டி போடுவதாக எண்ணாமல், தன் பயிற்சிகளில் முழுமையாக ஈடுபட்டதால், இரு பந்தயங்களையும் வென்று, அமெரிக்கர்களின் கேலிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது, 2008 பெய்ஜிங், 2012 இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 100, 200 மீட்டர் பந்தயங்களை வென்று உலகச்சாதனை நிகழ்த்தியுள்ள Usain St Leo Boltம் இந்த வழிமுறையைப் பின்பற்றுகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு. அவர் பங்கேற்ற பந்தயங்களைப் பார்த்தால், வியக்கத்தக்க வேகம் அவரிடம் இருப்பதைக் காணமுடியும், அதேநேரம், அவர் அந்தப் பந்தயத்தை அனுபவித்து ஓடுவதையும் காணமுடியும்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டு வீரர், டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீரர் Roger Federer. இவர் டென்னிஸ் விளையாடுவதை நடனமாடுவதோடு ஒப்பிட்டு பேசுவார்கள் விவரம் தெரிந்தவர்கள். டென்னிஸ் விளையாட்டை முழுவதும் அனுபவித்து விளையாடுவதால், பல உலகச் சாதனைகளுக்கு அவர் உரிமையாளர்.

தலை சிறந்த விளையாட்டு வீரர்கள் நமக்குச் சொல்லித்தரும் வாழ்வுப் பாடத்தைக் கற்றுக்கொள்ள முயல்வோம். முடிவுகளைப்பற்றி பதட்டமும், இறுக்கமும் கொள்ளாமல், செய்யும் செயல்களை முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும்போது, பெரும்பாலான நேரங்களில் வெற்றி வந்துசேர்வது உறுதி. அப்படியே, வெற்றி கிட்டவில்லையென்றாலும், செய்ததை நம்மால் முடிந்தவரை முழுமையாகச் செய்தோம் என்ற நிறைவே போதுமே! வாழ்வெனும் பந்தயத்தில் முழுமையாக ஈடுபட்டு, அனுபவித்து ஓடுவதற்கு இறைவன் நமக்கு நல்லொளி தர மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.