2012-08-10 15:46:14

பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பவர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்படவேண்டும்


ஆக.10,2012. கருவில் வளர்வது ஆணா, பெண்ணா என்று ஆய்வுகள் செய்து, பெண்குழந்தை என்றால் கருவிலேயே அதை அழிப்பதில் ஈடுபடுபவர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்படவேண்டும் என்று இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் ஓர் அதிகாரி கூறினார்.
பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கும் அவலம் குறித்து இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பெண்கள் பணிகளின் செயலர் அருள்சகோதரி ஹெலன் சல்தானா CNS கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை ஆய்வுசெய்து கருக்கலைப்பை மேற்கொள்வது இந்தியாவில் சட்டப்படி குற்றம் என்றாலும், இத்தகையக் கொடுமைகளில் ஈடுபடுவோருக்குச் சட்டப்படி தண்டனைகள் இல்லாததால், இக்குற்றம் பரவி வருகிறது என்று அருள்சகோதரி சல்தானா சுட்டிக்காட்டினார்.
பெண் குழந்தைகளைக் கருக்கலைப்பு செய்வோர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, அதற்குரிய தண்டைனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு ஜூலை மாதம் முதல் இந்தியாவில் ஆதரவு வளர்ந்துவருகிறது என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த அவலமான பழக்கத்தைப்பற்றிய விழிப்புணர்வை வளர்க்க, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8ம் தேதி அன்னை மரியாவின் பிறந்த நாளை பெண் குழந்தைகள் நாளாக இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை 1997ம் ஆண்டு முதல் சிறப்பித்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.